தனியார் அறுவடை எந்திர வாடகையினை முறைப்படுத்த முத்தரப்பு கூட்டம்
தனியார் அறுவடை எந்திர வாடகையினை முறைப்படுத்த முத்தரப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.;
தனியார் அறுவடை எந்திர வாடகையினை முறைப்படுத்த முத்தரப்பு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த வாரம் நடைபெற்ற மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டத்தில் தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை முறைப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். அதை தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலக ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள், தனியார் அறுவடை எந்திர உரிமையாளர், வேளாண்மை மற்றும் பிற துறை அலுவலர்கள் உள்ளடங்கிய முத்தரப்பு கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நேற்று நடைபெற்றது.
பின்னர் அவர் கூறுகையில், தனியார் அறுவடை எந்திரங்களுக்கான வாடகையினை முறைப்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து விவசாயிகளால் வலியுறுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் மற்றும் அறுவடை எந்திரங்களின் உரிமையாளர்கள் ஒருங்கிணைந்த கூட்டத்தில் ஒருமித்த கருத்து உருவாக்கபட்டு அறுவடை எந்திரங்களுக்கான வாடகை ஒரு மனதாக நிர்ணயம் செய்து தீர்மானம் செய்யப்பட்டது.
அதன் படி பெல்ட் வகை ஒருங்கிணைந்த அறுவடை எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.2 ஆயிரத்து 300-ம், டயர் வகை ஒருங்கிணைந்த எந்திரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,650-ம் என நிர்ணயம் செய்யப்படுகின்றது என்றார்.
கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குனர் அரக்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி மற்றும் பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.