பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூவர்ண கொடி - கவர்னர் ஆர்.என்.ரவி. வழங்கினார்

கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மூவர்ண கொடியை கவர்னர் ஆர்.என். ரவி வழங்கியதுடன் பொதுமக்கள் தங்கள் வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றவும் கேட்டுக்கொண்டார்.

Update: 2022-08-14 05:13 GMT

இந்தியா சுதந்திரம் அடைந்து 75-வது ஆண்டையொட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் நடந்து வருகிறது. அந்த வகையில் 75-வது சுதந்திர தின விழா நாளை (திங்கட்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதன் ஒரு பகுதியாக வீடுகள் மற்றும் அலுவலகங்களில் மூவர்ண கொடியை நேற்று முதல் 3 நாட்கள் ஏற்றலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. அதனடிப்படையில் தபால் அலுவலகங்களிலும் தேசிய கொடி விற்பனை செய்யப்பட்டன.

அந்த வகையில், கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் தக்கர் பாபா வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகள் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், மகாகவி சுப்பிரமணிய பாரதி, சரோஜினி தேவி, சுவாமி விவேகானந்தர் மற்றும் பல்வேறு சுதந்திர போராட்ட தியாகிகள் போன்று வேடமிட்டு வந்தனர். அவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், கவர்னர் ஆர்.என்.ரவி. மூவர்ண கொடியை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

விழாவில் மூவர்ண கொடியை ஏற்றி கவர்னர் ஆர்.என்.ரவி. பேசும்போது, 'நமது தேசத்தின் பெருமையை மீட்டெடுக்க போராடியவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். ஆசிரியர்கள் தேர்ச்சி பெறுவது மட்டுமல்லாது பொறுப்பையும் ஏற்க வேண்டும். இந்திய சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகத்தால் இன்று நாம் விலைமதிப்பற்ற கனிகளை அனுபவித்து வருகிறோம். ஒவ்வொரு ஆசிரியர்களும், மாணவர்களும் தங்கள் வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி பெருமையுடன் வாழ வேண்டும்' என்றார்.

விழாவில் தக்கார் பாபா தலைவர் டாக்டர் எஸ்.பாண்டியன், ஹரிஜன சேவா சங்க மாநில தலைவர் பி.மாருதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து திருவல்லிக்கேணியில் உள்ள என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரியில் நடந்த 75-வது ஆண்டு சுதந்திர தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு 'வந்தே மாதரம்' என்ற தலைப்பிலான கண்காட்சியை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, டாக்டர் கே.ஸ்ரீதர் எழுதிய 'மறக்கப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள்' என்ற நூலை கவர்னர் வெளியிட்டார்.

தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி பேசும் போது, 'தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலை போராளிகளின் உயிர் தியாகங்கள் மற்றும் துன்பங்களுக்காக நாம் நன்றியுள்ளவர்களாக இருப்போம். இது இந்தியாவின் பெருமையை மீட்டெடுக்கிறது. சிறந்த தேசத்தை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இளைஞர்கள் வளரவும், சாதிக்கவும், சிறந்து விளங்கவும் வேண்டும்' என்றார்.

விழாவில் சுப்பிரமணிய பாரதியின் பேரனும், கர்நாடக இசைக் கலைஞருமான ராஜ்குமார் பாரதி, சீனிவாஸ் இளைஞர்கள் சங்க தலைவர் டி.ஏ.சம்பத்குமார், என்.கே.டி. தேசிய மகளிர் கல்வியியல் கல்லூரி செயலாளர் டாக்டர்.எம்.ஆறுமுகம் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். விழாவில் கல்லூரி மாணவ, மாணவியர் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்