திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரியகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும்

திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரியகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.;

Update:2023-06-17 01:29 IST

திருச்சி திருவெறும்பூர் கூத்தைப்பார் பெரியகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

கூத்தைப்பார் பெரியகுளம்

திருச்சியை அடுத்த திருவெறும்பூர் கூத்தைப்பாரில் பெரியகுளம் உள்ளது. இந்த குளத்தின் பாசனம் மூலம் திருவெறும்பூர், கூத்தைப்பார், நடராஜபுரம், வேங்கூர், அரசங்குடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் ஏக்கரில் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இந்த குளத்தில் மீன்களும் வளர்க்கப்பட்டு வருகிறது.

இதனால் மீன்களை உணவாக சாப்பிடும் பல்வேறு பறவை இனங்கள் ஜூன் மாதம் முதல் இனப்பெருக்கத்திற்காக இந்த குளத்துக்கு வந்து செல்கின்றன. இதனை பார்க்க திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, கல்லணையை பார்க்க வரும் சுற்றுலா பயணிகளும் வருகை தருவது வழக்கம்.

சுற்றுலா மையம்

இதனால் இந்த பகுதி ஒரு சுற்றுலா மையமாக மாறி வருகிறது.

தற்போது இந்த குளத்தில் ஒரு சில பகுதிகளில் குறைவான தண்ணீர் இருப்பதால் ஒரு சில பறவை இனங்கள் மட்டுமே காணப்படுகின்றன. குளத்தின் மற்ற இடங்களில் தண்ணீர் இல்லாததால் வறண்ட பாலைவனம் போல் காணப்படுகிறது. உய்யகொண்டான் வாய்க்காலில் நீர் திறந்து விட்டால் இந்த திருவெறும்பூர் பெரியகுளம் நிரம்பி கடல் போல் காட்சியளிக்கும்.

மேலும் இந்த குளத்துக்கு கொக்கு, ஊசிவால் வாத்து, பூநாரை, நத்தை குத்தி நாரை, மஞ்சள் மூக்கு நாரை, உண்ணிக்கொக்கு, காட்டு வாத்து, நீர்கோழி, கானாங்கோழி, மைனா, கரண்டிவாயன், குன்னத்தாரா, வெண்தலை சிலம்பன் போன்ற பறவை இனங்கள் இனப்பெருக்கத்திற்கு வந்து செல்லும் இந்த பறவை இனங்கள் ஜூன் முதல் மார்ச் மாதம் வரை இங்குள்ள மரத்தில் தங்கி இனப்பெருக்கம் செய்கின்றன. தற்போது இந்த குளத்தில் தண்ணீர் வருவதற்குள் குளத்தை தூர் வாரி, ஆகாய தாமரை மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றி குளத்தை சீர்படுத்த வேண்டும் என்பது அந்த பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறியதாவது:-

படகு சவாரி

திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பாரதி:- திருவெறும்பூர் பகுதியில் கல்வி நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், ஆன்மிக தலங்கள் உள்ளிட்டவைகள் தவிர பொழுதுபோக்குக்காக ஒரு பூங்கா கூட கிடையாது. காலை நேரத்தில் திருவெறும்பூர், பெல், துவாக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் பெரிகுளம் கரையில் நடைப்பயிற்சி மேற்கொள்கிறார்கள். எனவே கூத்தைப்பார் குளத்தில் படகு சவாரி அமைக்க வேண்டும்.

பாதுகாக்க வேண்டும்

பறவை ஆர்வலர் தங்கமணி:- கூத்தைப்பார் பெரிய குளத்தில் நீர்ப்பறவைகள் அதிக அளவில் உள்ளன. சில வருடங்களுக்கு முன்பு கூழைக்கடா பறவைகள் வருகை தந்ததை பார்க்க முடிந்தது. மேலும் நூறு வகையான வலசை பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வந்து செல்லும். வலசைப்பறவைகளின் வருகையால் ஒரு நாளுக்கு 2 டன் கழிவுகள் கிடைக்கின்றன. விவசாயத்துக்கு இது மிக சிறந்த இயற்கை உரமாகும். எனவே வலசை போகும் பாதைகள் நீர்நிலைகள் தங்கும் இடங்கள் போன்றவற்றை பாதுகாக்க வேண்டியது மிகவும் அவசியமானது. இந்த குளத்தை பறவைகள் வாழும் பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவித்து, பறவைகளை பார்வையிட ஆங்காங்கே காட்சி மேடைகள், பாதை வசதிகள் செய்து தர மாவட்ட நிர்வாகம் முயற்சி எடுக்க வேண்டும்.

மின்விளக்கு அமைக்க வேண்டும்

திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த பறவை ஆர்வலர் பால பாரதி:- இக்குளத்தில் உள்நாடு இன்றி வெளிநாடுகளில் இருந்தும் பறவைகள் இனப்பெருக்கத்திற்காக அதிக அளவில் வந்து செல்கின்றன. எனவே இந்தகுளத்தை பறவைகள் சரணாலயமாக மாற்ற வேண்டும். இதன் மூலம் பறவைகள் பாதுகாக்கப்படும், உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்