திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மகளுடன் தீக்குளிக்க முயற்சி

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-03-13 12:26 GMT

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மண்எண்ணெய் ஊற்றி மகளுடன் தீக்குளிக்க முயன்ற மூதாட்டியால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்டம் முசிறி பைத்தம்பாறை செட்டியார் தெருவை சேர்ந்தவர் அரங்கராஜன். இவரது மனைவி சரஸ்வதி (வயது 60). இவர் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைதீர்க்கும் முகாமிற்கு தனது மகள் அனிதாவுடன் வந்தார்.

பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பின்புறம் சென்று தங்கள் உடலில் மண்எண்ணெய் ஊற்றிக்கொண்டு மனுகொடுக்கும் இடத்துக்கு வந்தனர். குறைதீர்க்கும் கூட்ட அரங்குக்கு செல்லும் நுழைவு வாயில் முன் அவர்கள் உட்கார்ந்து தீக்குளிக்க போவதாக கூறினர்.

போலீஸ் வழக்கு

இதைப்பார்த்த போலீசார், தீயணைப்பு துறையினர் அவர்கள் இருவரையும் தடுத்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதுபற்றி அறிந்த கலெக்டர் பிரதீப்குமார், அங்கு வந்து சரஸ்வதியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், எனது கணவர் கிரையம் செய்து பெற்ற இடத்துக்கு கிராம நிர்வாக அலுவலர் பட்டா வழங்காமல் இழுத்தடித்து வருகிறார். தற்போது அந்த நிலத்தை சிலர் அபகரிக்க முயற்சி செய்கிறார்கள். ஆகவே சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து எனது நிலத்தை காப்பாற்றி பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பட்டா வழங்க கால தாமதம் செய்யும் கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேரில் வந்து மனுவை வாங்கிக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். பின்னர், தற்கொலைக்கு முயன்றதாக சரஸ்வதி மீது திருச்சி செசன்சு கோர்ட்டு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

----

Tags:    

மேலும் செய்திகள்