பணியின்போது உயிர்நீத்த 188 காவலர்களுக்கு வீரவணக்கம்

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கடந்தாண்டு பணியின்போது உயிர்நீத்த 188 காவலர்களுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.;

Update: 2023-10-21 18:17 GMT

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் கடந்தாண்டு பணியின்போது உயிர்நீத்த 188 காவலர்களுக்கு டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

காவலர்களுக்கு வீரவணக்கம்

லடாக் பகுதியில் கடந்த 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ந் தேதி 'ஹாட் ஸ்பிரிங்ஸ்' என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், மத்திய பாதுகாப்பு படைக்காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர்.

இதைத்தொடர்ந்து நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின்போது வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 21-ந் தேதி காவலர் வீரவணக்கநாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் காவலர்களுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு வேலூர் சரக போலீஸ் டி.ஐ.ஜி.முத்துசாமி தலைமை தாங்கி பணியின்போது உயிர்நீத்த காவலர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

60 குண்டுகள் முழங்க...

அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் திருநாவுக்கரசு, பழனி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர் உயிர்நீத்த காவலர்களின் வீர மரணங்களை நினைவுகூறும் வகையில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

இந்தியாவில் கடந்தாண்டு தேசத்திற்காக பணியின்போது தன் உயிரை நீத்த 188 காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் விதமாக 60 குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து அனைவரும் சில நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர். பின்னர் வீரவணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. இதையொட்டி போலீசார் கருப்பு பட்டை அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்