பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து
டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி தேர்வில் ஸ்ரீபதி வெற்றி பெற்றுள்ளார்.;
சென்னை,
திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாது மலை அடுத்த புலியூர் மலை கிராமத்தை சேர்ந்தவர் பழங்குடியின பெண் ஸ்ரீபதி வயது (22). இவர் ஏலகிரி மலையில் உள்ள பள்ளியில் கல்வி கற்று பின்னர் அப்பகுதியில் பி.ஏ., பி.எல். சட்டப்படிப்பு படித்தார். படித்துக்கொண்டிருக்கும்போதே ஸ்ரீபதிக்கு திருமணம் ஆகியுள்ளது. மேலும் இவருக்கு குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி. சிவில் நீதிபதி தேர்வு நடைபெற்றது. இதனை எழுதிய ஸ்ரீபதி, தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் ஜவ்வாது மலையில் 22 வயதில் சிவில் நீதிபதியாக பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். அவருக்கு தற்போது வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
அந்த வகையில் பழங்குடியின பெண் நீதிபதி ஸ்ரீபதிக்கு தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது;-
"திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்து புலியூர் கிராமத்தை சேர்ந்த பழங்குடியின பெண் திருமதி.ஸ்ரீபதி (வயது 23) டி.என்.பி.எஸ்.சி. உரிமையியல் நீதிபதி பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்று சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றுள்ளார். பெரிய அளவில் வசதிகள் இல்லாத கிராமத்தில் இருந்து கொண்டு பெரிய சாதனையை சிறுவதிலேயே செய்திருக்கிறார்.
பெண்கள் அனைத்து துறைகளிலும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார். எனவே இதுபோன்று இன்னும் பல்வேறு சாதனைகளை செய்து ஒட்டுமொத்த பெண்களுக்கும் மிகப்பெரிய எடுத்துக்காட்டாக எப்பொழுதும் இருப்பார் என்று மனப்பூர்வமாக தே.மு.தி.க. சார்பில் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.