சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில்சாலை வசதி கேட்டு பழங்குடியின மக்கள் மனு

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில்சாலை வசதி கேட்டு பழங்குடியின மக்கள் மனு கொடுத்தனர்.;

Update: 2023-07-03 19:42 GMT

சேலம்

சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலை வசதி கேட்டு கலெக்டர் கார்மேகத்திடம் பழங்குடியின மக்கள் மனு கொடுத்தனர்.

குறைதீர்க்கும் கூட்டம்

சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார். ஏற்காடு அருகே உள்ள சொனப்பாடி கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள், சித்ரா எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், ஏற்காடு தாலுகாவிற்குட்பட்ட வேலூர் ஊராட்சியில் உள்ள மலைக்கிராமங்களில் 1,500-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். காஞ்சேரி காப்புக்காடு முதல் இளையராமர் கோவில் வரை 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் தார்சாலை அமைக்கப்பட்டது. இந்த தார்சாலை தற்போது மிகவும் பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

தார்சாலை அமைக்க வேண்டும்

உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களை கூட ஆஸ்பத்திரிக்கு கட்டிலில் தூக்கி செல்லும் அவல நிலை உள்ளது. சாலை வசதி இல்லாததால் மாணவ, மாணவிகளால் மேற்படிப்பு தொடர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே எங்கள் கிராமத்துக்கு தார்சாலை அமைத்து கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த சிலர், ஆசிரியர் நியமன தேர்வு நடத்த வேண்டும். ஆசிரியர்களை அலைக்கழிக்காதீர் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய நோட்டீசுகளை கைகளில் ஏந்தி வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில், கடந்த 2013, 2017, 2019 மற்றும் 2023-ம் ஆண்டுகளில் நடந்த ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று நியமன தேர்வுக்கு தயாராகி வருகிறோம். எனவே அரசாணை 149-ஐ விரைந்து செயல்படுத்தி நியமன தேர்வை நடத்த வழிவகை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

உதவித்தொகை

தலைவாசல் அருகே உள்ள பெரியேரி கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் உள்பட பலர் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் உதவித்தொகை, கடனுதவி, அரசு வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை கலெக்டரிடம் வழங்கினர்.

Tags:    

மேலும் செய்திகள்