தொழில் சார்ந்த பொருட்களுடன் மனு அளிக்க வந்த பழங்குடி மக்கள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலத்துக்கு தொழில் சார்ந்த பொருட்களுடன் மனு அளிக்க வந்த பழங்குடி மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு சாதிச்சான்று வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டினர்.;

Update: 2023-01-27 10:18 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலத்துக்கு தொழில் சார்ந்த பொருட்களுடன் மனு அளிக்க வந்த பழங்குடி மக்களால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களுக்கு சாதிச்சான்று வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டினர்.

தொழில் சார்ந்த பொருட்கள்

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறை செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று கலந்து கொண்டார்.

அவரிடம் மனு அளிக்க திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குரும்பன்ஸ் இனத்தை சேர்ந்த பழங்குடி மக்கள் வீரபத்திரசுவாமி குருமன்ஸ் பழங்குடியினர் முன்னேற்ற நலச்சங்க மாவட்ட தலைவர் முருகேசன் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் மனு அளிக்க வந்தனர்.

அப்போது அவர்கள் தங்கள் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையிலான தொழிலுக்கு பயன்படுத்தும் ஆட்டினுடடைய முடிவெட்டும் கத்தி உள்ளிட்ட பொருட்களை கொண்டு வந்திருந்தனர்.

இதனால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சாதிச்சான்று வேண்டும்

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

திருவண்ணாமலை மாவட்டத்தில் குருமன்ஸ் பழங்குடியின மக்கள் சுமார் 30 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்களுக்கு சாதி சான்று வழங்க பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியுள்ளோம்.

அதன் அடிப்படையில் கலெக்டர் தலைமையில் உதவி கலெக்டர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் எங்களது கலாசாரத்தை ஆய்வு செய்து அதன் பின்னர் சாதி சான்று வழங்குவதாக தெரிவித்தனர்.

இதையடுத்து பழங்குடியினர் உதகை ஆய்வு மையத்தின் இயக்குனர் சுப்பிரமணியன் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் எங்களுடைய பகுதியில் ஆய்வு செய்ய வந்தனர்.

எங்களது கலாசாரம், தொழில், தெய்வ வழிபாடு உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர். அந்த ஆய்வு அறிக்கையில் குறும்பா, குறும்பர், குரும்பன் இவை அனைத்தும் குரும்பன்ஸ் இனத்தின் ஒத்த பெயர்கள் தான் என்று சமர்ப்பிக்கப்பட்டது.

தேர்தல் புறக்கணிப்பு

அதைத்தொடர்ந்து நாங்கள் சுமார் 5 பேர் சாதி சான்று பெற விண்ணப்பித்தோம்.

மேலும் குருமன்ஸ் இன மக்கள் வசிக்கும் கிராமங்களில் கிராம சபை கூட்டத்தில் தீர்மானமும் நிறைவேற்றினோம். ஆனால் இதுவரை எங்கள் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படவில்லை.

மேலும் இ-சேவை மையங்களில் குருமன்ஸ் எஸ்.டி. சாதி சான்று பதிவு செய்யக்கூடாது என்று அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

எனவே நாங்கள் இன்று வரை எங்களால் பதிவு செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். விண்ணப்பித்த 5 ஆயிரம் பேர் சான்று பெறமுடியவில்லை.

இதனால் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் வேலைவாய்ப்பும் பெற முடியவில்லை. ஏழை எளிய மக்களாகிய எங்களுக்கு சாதிச்சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அவ்வாறு வழங்காவிட்டால் அடுத்த கட்டமாக எங்கள் வீடுகளில் கருப்பு கொடி ஏந்தி போராட்டம் நடத்த உள்ளோம். அதைத்தொடர்ந்து தேர்தல் புறக்கணிப்பு, சிறை நிரப்பும் போராட்டம் உள்ளிட்ட போராட்டங்களிலும் ஈடுபட உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்