நடுக்கடலில் முப்படையினர் பாதுகாப்பு ஒத்திகை
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் முப்படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் முப்படையினர் பாதுகாப்பு ஒத்திகை நடத்தினர்.
நீண்ட கடற்கரை
தமிழகம் நீண்ட கடற்கரையை கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தின் கிழக்கே இலங்கை அமைந்து உள்ளது. இலங்கை இந்தியாவின் நட்பு நாடாக அறியப்பட்டாலும், சமீப காலமாக அங்கு அரங்கேறி வரும் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவை உஷார்படுத்தி உள்ளது.
குறிப்பாக தமிழகத்தின் தென்பகுதி பாதுகாப்பான பகுதியாக கருதப்பட்டு வந்தது. இதனால் நாட்டின் முக்கியமான உற்பத்தி கேந்திரங்கள் அனைத்தும் தென்மாவட்டங்களில் உருவாக்கப்பட்டன. குறிப்பாக அணுசக்தி துறைக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யக்கூடிய ஜிர்கோனியம் காம்ப்ளக்ஸ், கனநீர் ஆலை உள்ளிட்டவை தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அதே போன்று குலசேகரன்பட்டினத்தில் இஸ்ரோ மூலம் ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளது. அதே போன்று நெல்லை மாவட்டம் கூடங்குளத்தில் அணுமின்நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த அமைப்புகள் தென்மாவட்ட கடற்கரையோரங்களில் உள்ளன. இதன் காரணமாக ஏற்கனவே தூத்துக்குடியை மையமாக கொண்டு கடலோர காவல்படை இயங்கி வருகிறது. இதனால் பாதுகாப்பு படைகளின் தளங்களை அமைப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உளவு கப்பல்
அதே நேரத்தில் இலங்கையில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து இந்தியா தமிழக கடலோர எல்லையை பாதுகாப்பதில் முக்கியத்துவம் காட்டி உள்ளது. இதற்காக மத்திய அரசு பாரத்மாலா பரியோஜனா திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை சுமார் 456 கிலோ மீட்டர் தூர 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை எடுத்து உள்ளது.
இந்த சாலையில், விமானங்கள் இறங்குவதற்கான தளங்களும் ஆங்காங்கே அமைக்கப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் சீனாவின் உளவுக்கப்பல் விரைவில் இலங்கைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. இந்த உளவு கப்பல் தென்னிந்தியாவில் உள்ள முக்கிய பகுதிகளை உளவு பார்க்க கூடும் என்று பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன.
ஒத்திகை
மேலும் இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை இணைந்து பாதுகாப்பு பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன்படி ஏற்கனவே சென்னை, விசாகப்பட்டினத்திலும் ஒத்திகை நடத்தப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி அருகே கடல் பகுதியில் முப்படையினரின் பாதுகாப்பு ஒத்திகை நேற்று தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்காக கடற்படையின் 2 போர்க்கப்பல்களும் பயிற்சியில் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த பயிற்சி இன்றும் (செவ்வாய்க்கிழமை) தொடர்ந்து நடக்கிறது. இதனை முன்னிட்டு கடலோர பகுதியில் கடற்படை ரோந்து விமானம் தினமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
சீன உளவுக்கப்பல் இலங்கை வரும் நேரத்தில் நடத்தப்படும் இந்த பயிற்சி முக்கியத்துவம் வாய்ந்தாக கருதப்படுகிறது. ஆனாலும் இந்த பாதுகாப்பு ஒத்திகை, நாட்டின் பாதுகாப்பு கருதி ரகசியமாக வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.