பண்ணாரியில், 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்; வேறு இடத்தில் நடப்பட்டது

பண்ணாரியில், 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றம்; வேறு இடத்தில் நடப்பட்டது

Update: 2023-02-04 20:59 GMT

சத்தியமங்கலம்

சத்தியமங்கலத்தை அடுத்து பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் குண்டம் விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தீ மிதித்து தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி, கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து திரளான பக்தர்கள் கோவில் பகுதியில் கூடுவார்கள்.

இந்த கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் பகுதியில் 60 ஆண்டுகள் பழமையான ஆலமரம் ஒன்று உள்ளது. குண்டம் விழாவின்போது தீ மிதிக்க வரும் பக்தர்களுக்கு இடையூறாக இருப்பதாக பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர். இதைத்தொடர்ந்து இந்த மரத்தை அகற்ற கோவில் நிர்வாகம் சார்பில் சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. அறநிலையத்துறை அனுமதி கொடுத்ததும், ஆலமரத்தை அகற்றும் பணி நடைபெற்றது. இதற்காக ஆலமரத்தின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டன. பின்னர் ஆலமரம் பொக்லைன் எந்திரம் உதவியுடன் எடுக்கப்பட்டது. எடுக்கப்பட்ட ஆலமரம் பிறகு கோவில் பகுதியில் உள்ள திருமண மண்டபத்துக்கு பின்புறம் கொண்டுவரப்பட்டது. அங்கு ஏற்கனவே ஆழமாக தோண்டப்பட்ட குழியில் வைத்து நடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் மேனகா, பரம்பரை அறங்காவலர்கள் புருஷோத்தமன், ராஜாமணி, தங்கவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்