மரங்கள் வீணடிக்கப்படுவதால் சமூக ஆர்வலர்கள் வேதனை
உடுமலை பகுதியில் மரங்கள் வீணடிக்கப்படுவதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.;
உடுமலை பகுதியில் மரங்கள் வீணடிக்கப்படுவதால் சமூக ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தன்னலம் கருதாது பலன் அளிக்கும்
இயற்கை என்பது செடி, கொடி, மரம், புல், பூண்டு என ஓரறிவு படைத்த ஒவ்வொன்றும் அனைத்து உயிரினங்கள் ஆரோக்கியமாக வாழ்வதற்கு ஏற்ற கட்டமைப்பை உருவாக்கி தருகிறது. அதில் முக்கியத்துவம், மகத்துவம், தெய்வ அம்சங்கள் நிறைந்தது மரங்கள். அதில் மருத்துவ குணங்கள் நிறைந்த, எண்ணிக்கையில் குறைந்த அளவில் அழிவின் விளிம்பில் உள்ள மரங்களை பாதுகாக்கும் வகையில் நமது முன்னோர்கள் கோவில்களில் தல விருச்சங்களாக நடவு செய்து பாதுகாத்தும், பராமரித்தும் வந்தனர்.
இயற்கை சீற்றங்களை தடுப்பது, பருவநிலையை சமன்படுத்துவது, மழைப்பொழிவை ஏற்படுத்துவது, மண்அரிப்பை தடுப்பது, கனிகள் மற்றும் நிழல் அளிப்பது பறவைகளுக்கு இருப்பிடம் அளிப்பது என அடி முதல் நுனி வரையிலும் உயிருடன் இருந்தாலும் இறந்து விட்டாலும் முழு பயனை தன்னலம் கருதாது அளித்து வருகிறது.
மரங்கள் வெட்டுவது
இத்தகைய சிறப்புகள் வாய்ந்த மரங்களை முன்ேனார் முறைப்படி நடவு செய்து பராமரித்து பாதுகாத்து வந்து நமக்கு அளித்துவிட்டுச் சென்றனர். அதை நாம் பாதுகாத்து வைத்துள்ளோமா என்றால் இல்லை என்ற பதிலே வரும். பல்வேறு காரணங்களுக்காக ஏராளமான மரங்கள் ஈவு இரக்கமின்றி வெட்டப்பட்டு வருகிறது. இதனால் இயற்கையின் சுழற்சி அதன் இயல்பு தன்மையில் இருந்து படிப்படியாக மாறி வருகிறது.
இதை உணர்வு பூர்வமாக உணர்ந்தும் மரங்களை வெட்டுவது நிறுத்தப்படவும் இல்லை. அதற்கு பதிலாக புதிதாக நடவு செய்வதற்கும் முன்வரவில்லை. சிலர், அமைப்புகள், அறக்கட்டளைகளை ஏற்படுத்தி மரங்களை நடவு செய்தும் பொதுமக்களுக்கு வழங்கியும் வருகின்றனர். ஆனால் அது முழுமையாக முறையாக பின்பற்றப்படுகிறதா என்றால் இல்லை என்ற பதிலே வரும். மரங்களை நடவு செய்கிறோம் என்ற பேரில் ஏராளமான மரக்கன்றுகளை வீணடித்து உயிரிழக்க செய்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-
நடவடிக்கை
மரங்களை நடவு செய்வது வரவேற்கத்தக்க விஷயமாகும். ஒரு மரத்தை உருவாக்க பதப்படுத்தப்பட்ட மண்ணில் விதையை தூவி இரவு பகலாக கண்காணித்து வந்து ஒரு வருடத்திற்கு அர்ப்பணிப்பு உணர்வுடன் உழைப்பை தந்தால் மட்டுமே மரம் வளர்ச்சி அடையும். மரத்தை நடவு செய்ய வேண்டும் என்றால் முதலில் அதற்கான விதையை ஒவ்வொருவர் மனதிலும் ஆழமாக தூவ வேண்டும். அதன் பயன்கள் பண்புகளை தெளிவாக அனைவருக்கும் எடுத்து கூற வேண்டும். மரத்தின் உயிரானது மனிதனின் உயிரை விட மேலானது பல தலைமுறைகள் கடந்தும் பலனளிக்கக் கூடியது.
மனிதனின் தலையை வெட்டினால் உயிரை இழந்து விடுவோம். ஆனால் மரத்தின் தலையை வெட்டினால் மீண்டும் துளிர்விடும். அடியோடு பெயர்த்து எடுத்து மண்ணில் வீசினால் கூட துளிர் விட்டு வளரும் தன்மை மரத்திற்கு உண்டு. தனியார் அமைப்புகள் அல்லது அறக்கட்டளைகள் மூலம் எத்தனை மரங்கள் நடவு செய்யப்பட்டது. அவை தற்போது என்ன நிலையில் உள்ளது என்பதை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாக உள்ளது. சுய விளம்பரத்திற்காக மரம் நடுதல் என்ற பேரில் மரக்கன்றுகளுக்கு உயிர் இழப்பை ஏற்படுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.