நோயாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை?
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.;
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தூய்மை பணியாளர்கள் சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நோயாளிகளுக்கு சிகிச்சை
சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. இந்த ஆஸ்பத்திரியில் விபத்து அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த தாய்-சேய் நல சிகிச்சைப்பிரிவு, புறநோயாளிகள் பிரிவு என பல்வேறு பிரிவுகள் செயல்பட்டுவருகிறது. இங்கு தினசரி புற நோயாளிகளாக 2 ஆயிரம் பேரும், உள் நோயாளிகளாக 1200-க்கும் மேற்பட்டோரும் சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்நிலையில் இங்குள்ள 300 படுக்கையறை பிரிவில் உள்ள ஐ.சி.யு. வார்டில் தூய்மை பணியாளர்கள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வைரலாகியது. இதை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
புகார்
இந்த சம்பவம் குறித்து மருத்துவக்கல்லூரி முதல்வர் ரேவதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:- சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டோம். படுக்கையில் இருக்கும் நோயாளிகளை சுத்தம் செய்ய மட்டுமே தூய்மை பணியாளர்களை பயன்படுத்துகிறோம். அவர்கள் சிகிச்சை அளிக்கவில்லை. மருத்துவக்கல்லூரிக்கு அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றே இதுபோன்ற செயலில் சிலர் ஈடுபடுகின்றனர். அவர்கள் குறித்து புகார் அளிக்க உள்ளோம் என்றார்.