மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பயிற்சி
ராணிப்பேட்டையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து பயிற்சி நடந்தது.;
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்த மாவட்ட அளவிலான பயிற்சி நடந்தது. கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். இப்பயிற்சியில் 8 ஊராட்சி ஒன்றியங்களில் பணிபுரியும் இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் என மொத்தம் 56 நபர்கள் கலந்து கொண்டனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான பூர்த்தி செய்த படிவத்தினை எவ்வாறு மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்வது என்பது குறித்து, மாநில அளவில் பயிற்சியில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர்கள் விரிவாக விவரித்தனர்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முரளி, இல்லம் தேடி கல்வி வட்டார ஆசிரியர்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.