மீனவ இளைஞர்களுக்கு பயிற்சி

தூத்துக்குடியில் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை கிராமங்களின் வரைபடங்களை வரைவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வருங்கால வாழ்வாதார பகுதியை கண்டறியவும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது;

Update: 2023-01-19 18:45 GMT

தூத்துக்குடியில் தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கு கடற்கரை கிராமங்களின் வரைபடங்களை வரைவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் வருங்கால வாழ்வாதார பகுதியை கண்டறியவும் இளைஞர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

விடுபட்ட மீனவ கிராமங்கள்

தமிழகத்தில் கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை செயல்படுத்துவது தொடர்பாக தமிழக சுற்றுச்சூழல் துறை சார்பில் இணையதளத்தில் வெளியிடப்பட்ட வரைபடத்தில் 400-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்கள் விடுபட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சென்னை தேசிய கடல்சார் ஆராய்ச்சி மையம், அகில இந்திய மீனவர் சங்கம் மற்றும் தமிழ்நாடு, புதுவை மீனவர் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து விடுபட்ட மீனவ கிராமங்களின் வரைபடங்களை, மீனவ இளைஞர்களை கொண்டு வரைவது குறித்து பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வரைபட பயிற்சி

அதன்படி தூத்துக்குடியில் மீனவ இளைஞர்களுக்கு கடலோர ஒழுங்குமுறை அறிவிப்பாணை வரைபட பயிற்சி நேற்று நற்செய்தி நடுவத்தில் நடந்தது. பயிற்சிக்கு ஊர்நலக் கமிட்டி எடிசன் தலைமை தாங்கினார். சாந்த குரூஸ் வரவேற்று பேசினார்.

நற்செய்தி நடுவம் இயக்குனர் ஸ்டார்வின் ஆசி வழங்கினார். மணப்பாடு பஞ்சாயத்து தலைவர் கிரேன்சிட்டா வினோ, ஆலந்தலை கில்பர்ட் ரொட்ரிகோ, தேசிய பாரம்பரிய மீனவர் கூட்டமைப்பு தலைவர் சேனாதிபதி சின்னத்தம்பி ஆகியோர் பேசினர். அகில இந்திய மீனவர் சங்க தலைவர் அண்டன் கோமஸ் பயிற்சி குறித்து விளக்கி பேசினார். தேசிய கடல்சார் ஆராய்ச்சி மைய தலைமை மற்றும் முதுநிலை விஞ்ஞானி எஸ்.கே.தாஸ், திட்ட விஞ்ஞானிகள் மாயா மணிகண்டன், எஸ்.சுஜித், எஸ்.சாஜூமோல் மற்றும் பிரபிர் பானர்ஜி ஆகியோர் கலந்து கொண்டு பயிற்சி அளித்தனர்.

வருங்கால வாழ்வாதார பகுதி

இந்த பயிற்சியில் கடலோரப் பகுதிகளில் மீனவர்கள் பயன்படுத்தக்கூடிய மீன்பிடிக்கும் பகுதிகள், சுற்றுலா தள பகுதிகள், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதிகள், கடல் அரிப்பு ஏற்படும் பகுதி, மீனவர்களின் வருங்கால வாழ்வாதாரப் பகுதி ஆகியவற்றை கண்டறிந்து அதை எவ்வாறு வரைபடமாக மாற்றுவது என்பது குறித்து விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் பல்வேறு கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவ இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இது குறித்து அகில இந்திய மீனவர் சங்கத் தலைவர் அண்டன் கோமஸ் கூறும் போது, மீனவ இளைஞர்கள் மூலம் வரையப்படும் மீனவ கிராமங்கள் பற்றிய வரைபடத்தை கடலோர ஒழுங்குமுறை ஆணையம் வரைபடத்தில் சேர்க்கப்பட்டு அரசு அங்கீகாரம் செய்து, இணையதளத்தில் வெளியிட வேண்டும். மேலும் இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டும் வெளியிட வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்