முண்டந்துறையில் வனத்துறை பணியாளர்களுக்கு பயிற்சி; புலியின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டது

கணக்கெடுப்பு பணியை முன்னிட்டு களக்காடு முண்டந்துறையில் வனத்துறை பணியாளர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் நடத்திய களஆய்வில் புலியின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டது.

Update: 2023-02-08 20:30 GMT

விக்கிரமசிங்கபுரம்:

கணக்கெடுப்பு பணியை முன்னிட்டு களக்காடு முண்டந்துறையில் வனத்துறை பணியாளர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் நடத்திய களஆய்வில் புலியின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டது.

பயிற்சி கூட்டம்

நெல்லை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள களக்காடு முண்டந்துறைப் புலிகள் காப்பகத்தில் வனஉயிரினக் கணக்கெடுப்புப் பணி இன்று (வியாழக்கிழமை) முதல் 8 நாட்கள் நடைபெறுகிறது. இதில் வனத்துறை பணியாளர்கள் சுமார் 120 பேர் ஈடுபடுகிறார்கள்.

இதையடுத்து கணக்கெடுப்பில் ஈடுபடுபவர்களுக்கான பயிற்சி முண்டந்துறை வனச்சரகக் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது.

பயிற்சியில் அம்பை, பாபநாசம், முண்டந்துறை மற்றும் கடையம் வனச்சரகத்தைச் சேர்ந்த வனவர்கள், வனக்காப்பாளர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள் 120 பேர் கலந்துகொண்டனர்.

பயிற்சியைத் தொடர்ந்து 4 வனச்சரகத்திற்குள்பட்ட 31 பீட் பகுதியில் இன்று முதல் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர். 16-ந்தேதி வரை நடக்கும் கணக்கெடுப்பில் சேகரிக்கும் வனவிலங்குகளின் கால்தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள் ஆகியவற்றைக் கொண்டு வன உயிரிகளின் எண்ணிக்கை கணக்கெடுக்கப்படும்.

புலியின் கால்தடம் கண்டுபிடிப்பு

செல்போன் செயலி மூலம் மேற்கொள்ளப்படும் கணக்கெடுப்புப் பணி குறித்து உயிரியலாளர் ஸ்ரீதர் மற்றும் ஆக்னஸ் பயிற்சி அளித்தனர்.

பயிற்சியில் வனச்சரகர்கள் பாபநாசம் ஸ்டாலின், கடையம் கருணாமூர்த்தி, முண்டந்துறை கல்யாணி, அம்பை நித்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பயிற்சி கூட்டத்தை தொடர்ந்து முண்டந்துறை வனச்சரக அலுவலகம் அருகே உள்ள வனப்பகுதியில் வனத்துறையினர் களப்பயிற்சி மேற்கொண்டனர்.

அப்போது அங்குள்ள குளத்தின் கரையில் புலியின் கால்தடம் பதிவாகி இருந்தது. அங்கு தண்ணீர் குடிப்பதற்காக புலி வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர். கணக்கெடுப்பு பணியை தொடங்கும் முன்பே புலியின் கால்தடம் கண்டுபிடிக்கப்பட்டது வனத்துறையினருக்கு ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்