வெளிநாடுகளில் படித்த டாக்டர்களுக்கு பயிற்சி

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த டாக்டர்களுக்கு, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் உயிர் காக்கும் சிகிச்சை திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2023-02-07 18:45 GMT

ஊட்டி, 

வெளிநாடுகளில் மருத்துவம் படித்த டாக்டர்களுக்கு, ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் உயிர் காக்கும் சிகிச்சை திட்டம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

வெளிநாடுகளில் மருத்துவம்

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால், வெளிநாடுகளில் இதுபோன்ற தேர்வு இல்லை. எனவே, வெளிநாடுகளில் மருத்துவம் படித்து இந்தியாவில் மருத்துவம் பார்க்க விரும்புபவர்களுக்கு, படிப்பு முடிந்த பின்னர் இந்தியாவில் மருத்துவம் பார்ப்பதற்காக தனியாக தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த தேர்வு முடிந்த பின்னர் அவர்கள் இந்தியாவில் உள்ள அரசு அல்லது தனியார் மருத்துவக்கல்லூரியில் ஓராண்டு கட்டாய பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும். இதன்படி நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு மருத்துவக்கல்லூரியில் வெளிநாடுகளில் டாக்டர் பட்டம் பெற்ற 50 பேர் பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டு உள்ளனர்.

பயிற்சி வகுப்பு

இந்தநிலையில் அவர்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை திட்டத்தின் கீழ் முதலுதவி சிகிச்சை அளிப்பது எவ்வாறு என்பது குறித்து பயிற்சி வகுப்பு நடைபெற்றது. அவசர மருத்துவ சிகிச்சை பிரிவு டாக்டர் அமர்நாத் பயிற்சி அளித்தார். இதில் பயிற்சி டாக்டர்கள் ஆர்வமாக கலந்துகொண்டு பல்வேறு சந்தேகங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.

இதுகுறித்து டீன் மனோகரி கூறுகையில், தமிழ்நாடு அரசு சாலை பாதுகாப்பு, சாலை விபத்துகளை குறைத்தல், சாலை விபத்தில் உயிரிழப்புகளை தடுத்தல் ஆகியவற்றை குறைப்பதற்காக இன்னுயிர் காப்போம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதேபோல் விபத்து அல்லாத சுவாச பிரச்சினை, ரத்த அழுத்தம் குறைவு, திடீர் வலிப்பு போன்ற திடீர் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக உயிர் காக்கும் சிகிச்சை திட்டத்தின் கீழ் பயிற்சி டாக்டர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் மார்ச் மாதம் முதல் வாரம் மீண்டும் மற்றொரு பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்