யானைகள் கணக்கெடுப்பு குழுவினருக்கு பயிற்சி
களக்காடு மலையில் யானைகள் கணக்கெடுப்பு பணி குழுவினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
களக்காடு:
களக்காடு புலிகள் காப்பகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு யானைகள் கணக்கெடுப்பு நடந்தது. அதன் பின்னர் யானைகள் குறித்த ஒருங்கிணைந்த கணக்கெடுப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) தொடங்கி, 19-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. களக்காடு புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட களக்காடு, திருக்குறுங்குடி, கோதையாறு வனச்சரகங்களில் 32 இடங்களில் செல்போன் ஆப் மூலம் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபடவுள்ளனர். இவர்கள் யானைகளை நேரில் காண்பது, அவைகளின் எச்சங்களை சேகரித்தல், நீர்நிலைகளை சார்ந்து செல்லுதல் உள்ளிட்ட 3 முறைகளில் மூன்று நாட்கள் கணக்கெடுப்பில் ஈடுபடுகின்றனர்.
இதையொட்டி கணக்கெடுப்பு குழுவினருக்கு நேற்று தலையணையில் சிறப்பு பயிற்சி முகாம் நடந்தது. புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன், முகாமை தொடங்கி வைத்தார். அதனைதொடர்ந்து சூழலியலாளர் ஸ்ரீதரன் கணக்கெடுப்பு குழுவினருக்கு கணக்கெடுப்பது பற்றியும், சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்களை செல்போனில் பதிவு செய்வது குறித்தும் பயிற்சி அளித்தார்.
முகாமில் வனசரகர்கள் களக்காடு பிரபாகரன், கோதையாறு சிவலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கணக்கெடுப்பு முடிந்தவுடன் சேகரிக்கப்படும் புள்ளிவிவரங்கள் சென்னை வனத்துறை தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது. அங்கு நடைபெறும் ஆய்வுக்கு பின் களக்காடு மலையில் வாழும் யானைகளின் எண்ணிக்கை தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.