புதிதாக நியமிக்கப்பட்ட 102 நில அளவர்களுக்கு பயிற்சி
கடலூரில் புதிதாக நியமிக்கப்பட்ட 102 நில அளவர்களுக்கு பயிற்சி நடந்தது.
நெல்லிக்குப்பம்:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட 102 நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு நில அளவை குறித்த பயிற்சி முகாம் கடலூர் கிருஷ்ணசாமி கல்லூரியில் நடைபெற்றது. 90 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியை கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகர் தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் ஜெகதீஸ்வரன், கிருஷ்ணசாமி கல்லூரி தலைவர் ராஜேந்திரன், கல்லூரி செயலாளர் விஜயகுமார், உதவி இயக்குனர்கள் திருநாவுக்கரசு, சீனிவாசன் ஆகியோர் பேசினார்கள். முகாமில் நிலம் அளவீடு செய்வது குறித்து செயல் விளக்கத்துடன் பயிற்சி அளிக்கப்படும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் நில அளவர்கள் மற்றும் வரைவாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கடலூர் கோட்ட ஆய்வாளர் நாராயணன் நன்றி கூறினார்.