வேப்பந்தட்டை:
தமிழ்நாடு தொழில்நுட்ப மாநில மன்றம் மற்றும் வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி இணைந்து பெரம்பலூர் மாவட்ட அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் 50 அறிவியல் ஆசிரியர்களுக்கான 2 நாள் பணியிடை பயிற்சி, வேப்பந்தட்டை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கூட்டரங்கில் நடைபெற்றது. பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், இயற்பியல் துறை தலைவருமான பாஸ்கரன் வரவேற்று பேசினார். கல்லூரி முதல்வர் சிவநேசன் தலைமை தாங்கி பேசுகையில், மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல உறவு மேம்பட ஆசிரியர்களாகிய நாம் உயரிய நோக்கத்தில் செயல்பட வேண்டும், என்றார். இப்பயிற்சியை மாவட்ட கல்வி அலுவலர் சண்முகம் தொடங்கி வைத்து பேசினார். பல்கலைக்கழக இயக்குனர் சின்னப்பா, கல்லூரியின் தமிழ்த்துறை தலைவர் சேகர், காரைக்குடி அழகப்பா அரசு கலைக்கல்லூரி உதவி பேராசிரியர் கருணாகரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். இப்பயிற்சி முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் ஆசிரியர்கள் மற்றும் கல்லூரியில் பணிபுரியும் துறை தலைவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் கணினி அறிவியல் துறை தலைவர் சகாயராஜ் நன்றி கூறினார்.