விவசாயிகளுக்கு பயிற்சி
இலத்தூரில் மண்வள அட்டை விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.;
செங்கோட்டை:
செங்கோட்டை வட்டாரம் இலத்தூரில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் சார்பில் மண்வள அட்டை விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்கு வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) முகுந்தாதேவி தலைமை தாங்கி, மண் ஆய்வு செய்வதன் அவசியம் குறித்து விளக்கி கூறினார். ஒன்றியக்குழு உறுப்பினர் வள்ளியம்மாள் முன்னிலை வகித்தார். செங்கோட்டை வட்டார துணை வேளாண்மை அலுவலர் சேக்முகைதீன், மண் ஆய்வு எவ்வாறு செய்வது என்பது குறித்து எடுத்துரைத்தார்.
ஓய்வுபெற்ற வேளாண்மை அலுவலர் ராஜேந்திரகணேசன், ஆத்மா திட்டத்தின் தென்காசி வட்டார மேலாளர் சங்கரநாராயணன், செங்கோட்டை வட்டார மேலாளர் செல்வகுமார் உள்ளிட்டோர் பயிற்சி அளித்தனர். விவசாயிகள் சாகுபடி செய்யும் பயிர்களுக்கு சாகுபடி செய்வதற்கு முன்பே வயல்வெளியில் மண் மாதிரி எடுத்து பரிந்துரைப்படி உரமிடுதல் பற்றிய பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் மண்வளம் பேணுதல் தொடர்பான தொழில்நுட்பங்கள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. உதவி வேளாண்மை அலுவலர் அருணாசலம் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் முன்னோடி விவசாயிகள் குமார், அன்புராஜ், கருப்பசாமி, மூக்கன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.