விவசாயிகளுக்கு பயிற்சி
உச்சிப்புளி வேளாண்மை விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி நடைபெற்றது.
பனைக்குளம்.
மண்டபம் வட்டாரம் ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சரின் மானாவாரி மேம்பாட்டு இயக்கம் என்ற தலைப்பில் பயிற்சி நடைபெற்றது. இ்ந்த பயிற்சியில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட தேர்போகி, வெள்ளரிஓடை, நொச்சியூரணி, கோரவள்ளி, தங்கச்சிமடம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 40 விவசாயிகள் கலந்து கொண்டனர். இதில் ராமநாதபுரம் உயிர் உரங்கள் உற்பத்தி நிலையத்தின் வேளாண்மை அலுவலர் அம்பேத்குமார் கலந்து கொண்டு விவசாயிகள் மானாவாரி சாகுபடியில் நெற்பயிரை தொடர்ந்து பயறு வகைப்பயிர்கள் சாகுபடி செய்தல், எண்ணெய்வித்து பயிர்களான எள் சாகுபடி செய்தல், பயறு வகை சாகுபடியில் உயிர் உரங்களை பயன்படுத்தும் முறைகள் மற்றும் விதைநேர்த்தி, களை நிர்வாகம் குறித்து விளக்கி பேசினார். அதனை தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட வேளாண் விற்பனைகுழு கண்காணிப்பாளர் சரவணக்குமார், உச்சிப்புளி வேளாண்மை அலுவலர் பாண்டியன் ஆகியோர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தின் பயன்கள் குறித்தும்,அரசு வழங்கும் மானிய பொருட்கள் மற்றும் திட்டங்கள் குறித்தும் கூறினர். பயிற்சியின்போது விவசாயிகளின் சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. முடிவில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி நன்றி கூறினார்.