'நீட்' உள்பட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடக்கம்
‘நீட்' உள்பட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்பு தொடங்கியது.
அரியலூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' தேர்வு உள்ளிட்ட போட்டி தேர்வுகளுக்கான பயிற்சி வகுப்புகள் அரியலூர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. பயிற்சி வகுப்பினை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி தொடங்கி வைத்து பேசினார். அவர் பேசுகையில், மாணவர்கள் இந்த வகுப்புகளை முறையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். தினமும் நடக்கும் வகுப்புகளை கவனித்து, பாடங்களை புரிந்து கொண்டு படிக்க வேண்டும். தேர்வுகளை சிறப்பாக எழுத வேண்டும். கடின உழைப்பும், முயற்சியும் இருந்தால் வெற்றி உங்கள் வசமாகும். அரசு சார்பில் நடத்தப்படும் எத்தகைய வகுப்புகளையும் மாணவர்கள் முறையாக பயன்படுத்தி வெற்றி பெற வேண்டும், என்றார். இதைத்தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியர் சின்னத்துரை பேசினார்.
மாவட்டத்தில் அரியலூர், செந்துறை, திருமானூர் உள்ளிட்ட 6 ஒன்றியங்களில் நேற்று 'நீட்' தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கியது. இதில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மாவட்டத்தில் மொத்தம் 420 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கு வகுப்புகள் காலை மற்றும் மதியம் என இருவேளைகளிலும் நடைபெறுகின்றன.