காரைக்குடி,
புதுடெல்லி இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலும், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறையும் இணைந்து சமூக அறிவியல் பாடங்களில் ஆய்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் பற்றிய பயிற்சி வகுப்பின் தொடக்க விழா பல்கலைக்கழக நூலக கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ரவி பேசினார். அப்போது அவர் கூறுகையில், மேலை நாடுகள் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆராய்ச்சிகளுக்கு சமமான முக்கியத்துவம் அளிக்கின்றன. இந்தியாவில் தற்போது சமூக அறிவியல் ஆராய்ச்சியில் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும் கலாசார மானுடவியல் போன்ற துறைகளில் உள்ள தலைப்புகள் ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்ளப்படாத நிலை உள்ளது. கிராமப்புறங்களில் காணப்படும் சமூக பிரச்சனைகள், வளர்ச்சி குறித்த ஆய்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தகுந்த ஆலோசனைகளை ஆராய்ச்சியாளர்கள் வழங்க வேண்டும்.
பல ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் திறன்களையும், பயிற்சிகளையும் பெற்று, வளர்ந்த நாடுகளுக்கு செல்கிறார்கள். இதனை சரி செய்ய வேண்டும் என்றார்.
இதையடுத்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக நூலக மற்றும் தகவல் அறிவியல் துறை பேராசிரியர் சேதுபதி, அழகப்பா பல்கலைக்கழக ஆராய்ச்சி முதன்மை பேராசிரியர் நாராயண மூர்த்தி ஆகியோர் பேசினர். முன்னதாக கலைப்புல முதன்மையர் பேராசிரியர் தனுஷ்கோடி வரவேற்றார். இதில் நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளை சேர்ந்த ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.