தொல்பொருட்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி
தொல்பொருட்களை பாதுகாப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.;
தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையின்கீழ் இயங்கிவரும் தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவனத்தின் ஈராண்டு தொல்லியல் முதுநிலைப் பட்டயம் மற்றும் ஈராண்டு கல்வெட்டியல் முதுநிலைப் பட்டய படிப்பு பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது. இதில் பயின்று வரும் 29 மாணவர்களுக்கு மரபு மேலாண்மை மற்றும் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் என்ற பாடப்பிரிவின் ஒரு பகுதியாக வேதியியல் முறையில் தொல்பொருட்களைப் பாதுகாத்தல் குறித்த பயிற்சி தஞ்சை மணிமண்டபத்தில் உள்ள ராஜராஜன் அகழ்வைப்பத்தில் நடந்தது. இதில் சுடுமண்ணாலான பொருட்கள். இரும்பு, செம்பு, பித்தளையினாலான உலோகப் பொருட்கள், செப்புக் காசுகள், கற்சிலைகள் போன்ற தொல்பொருட்களைப் பாதுகாத்தல் மற்றும் தீயணைப்புக் கருவியைப் பயன்படுத்துதல் குறித்து அருங்காட்சியகங்கள் துறை ஓய்வு பெற்ற உதவி இயக்குனர் ஜெயராஜ், ஓலைச்சுவடிகள் பாதுகாத்தல் குறித்து பெருமாள், தாள்சுவடிகள் குறித்து ரங்கநாதன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசு தொல்லியியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம், துணை இயக்குனர் பாக்கியலட்சுமி, தமிழ்நாடு தொல்லியல் மற்றும் அருங்காட்சியகவியல் நிறுவன ஒருங்கிணைப்பாளர் தங்கதுரை, தொல்லியல் துறை அலுவலர்கள் சாய்பிரியா, உமையாள், ரசாயனர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.