தேனி-போடி இடையே 9-ந்தேதி நவீன ஆய்வு ரெயில் சோதனை ஓட்டம்
தேனி-போடி இடையே நவீன ஆய்வு ரெயில் சோதனை ஓட்டம் 9-ந்தேதி நடக்கிறது.;
மதுரை-போடி அகல ரெயில்பாதை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், தேனி வரை பணிகள் முடிந்து பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. போடி வரை பெரும்பாலான பணிகள் நிறைவு பெற்றதை தொடர்ந்து கடந்த 2-ந்தேதி ரெயில் என்ஜின் அதிவேக சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடந்தது. போடியில் இருந்து தேனி வரையிலான 15 கி.மீ. தூர தண்டவாள பாதையில் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் ரெயில் என்ஜின் இயக்கப்பட்டது. அப்போது ரெயில் என்ஜின் 9 நிமிடங்கள் 20 நொடிகளில் 15 கி.மீ. தூரத்தை கடந்தது.
இதையடுத்து தேனி-போடி ரெயில் பாதையில் ரெயில் செல்லும் போது அதிர்வுகள் ஏற்படுகிறதா? வேறு ஏதேனும் சிறு குறைபாடுகள் இருக்கிறதா? என்பதை கண்டறிய அடுத்தக்கட்ட சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. இதற்காக நவீன ஆய்வு ரெயில் பெட்டி ரெயில்வே துறையில் உள்ளது. அதிவேகத்தில் ரெயில் செல்லும் போது ஆய்வு முடிவுகளை இந்த ரெயில் பெட்டியில் உள்ள கணினி உடனுக்குடன் பதிவு செய்து வெளியிடும்.
அதன்படி, தேனி-போடி இடையேயான ரெயில் பாதையில் நவீன ஆய்வு ரெயில் பெட்டியுடன் 125 கி.மீ. வேகத்தில் சோதனை ஓட்டம் 9-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் இந்த சோதனை நடக்கிறது. எனவே இந்த அதிகவேக தொழில்நுட்ப ஆய்வு நடக்கும் நேரத்தில் பொதுமக்கள் ரெயில் தண்டவாளத்தை நெருங்கவோ, கடக்கவோ வேண்டாம் என்று ரெயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த தகவல் தென்னக ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.