மெட்ரோ ரெயில் கட்டுமான பணியின் போது விபரீதம் - ராட்சத இயந்திரம் மோதி வீடு சேதம்
மெட்ரோ ரெயில் கட்டுமான பணியின் போது ராட்சத இயந்திரம் மோதி வீடு ஒன்று சேதமடைந்தது.;
சென்னை,
சென்னையின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு மெட்ரோ ரெயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை போரூர் அஞ்சுகம் நகரில் மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத இயந்திரம் மோதி வீடு ஒன்று சேதம் அடைந்தது.
போரூர் அஞ்சுகம் நகரில் பார்த்தியநாதன் என்பவர் வீட்டின் மீது இயந்திரம் மோதியது. இயந்திரம் மோதியதை அடுத்து வீட்டில் இருந்த பார்த்தியநாதன் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே ஓடினர்.
ராட்சத இயந்திரம் பார்த்தியநாதன் வீட்டில் மோதியதை அடுத்து பூகம்பம் வந்ததாக நினைத்து மற்ற குடியிருப்பு வாசிகளும் வீட்டில் இருந்து வெளியேறினர். ராட்சத இயந்திரம் மோதியதில் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பேன் போன்ற உடமைகள் சேதமாகின.
உயரமான இயந்திரத்தை கையாண்ட ஆபரேட்டர் வீட்டை கவனிக்காமல் செயல்பட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தை தொடர்ந்து மெட்ரோ ரெயில் கட்டுமான நிறுவன ஊழியர்களை முற்றுகையிட்டு அப்பகுதி மக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.