டி.என்.பாளையத்தில் சோகம்வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை

டி.என்.பாளையத்தில் சோகம் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டாா்

Update: 2023-05-13 21:15 GMT

டி.என்.பாளையத்தில் வாட்ஸ்-அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ்

ஈரோடு மாவட்டம் டி.என்.பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. அவருடைய மகன் தயானந்தன் (வயது 20). இவர் அதே பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் கடந்த 10 ஆண்டுகளாக தங்கியிருந்து வந்தார். மேலும் கோபியில் உள்ள ஒரு தனியார் கலை அறிவியல் கல்லூரியில் பி.எஸ்சி. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தயானந்தனின் அத்தை மகன் யுவராஜ் என்பவரின் செல்போன் வாட்ஸ்-அப் ஸ்டேட்டசில் தயானந்தன் இரவு 1 மணிக்கு இறந்து விடுவதாக (1.AM dead) காண்பித்து உள்ளது. இந்த ஸ்டேட்டசை தயானந்தன் வைத்துள்ளார்.

தூக்கில் தொங்கினார்

உடனே யுவராஜ் தயானந்தனின் தந்தை மற்றும் உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். அதைத்தொடர்ந்து அனைவரும் வந்து தயானந்தன் தங்கியிருந்த வீட்டின் அறைக்கு சென்று கதவை தட்டியுள்ளனர். ஆனால் வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது.

இதனால் ஜன்னல் வழியே எட்டி பார்த்தனர். அப்போது தயானந்தன் மின்விசிறி மாட்டும் கொக்கியில் கயிற்றில் தூக்குப்போட்டு தொங்கிக்கொண்டிருந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள், கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.

சாவு

பின்னர் தயானந்தனை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு தயானந்தன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பங்களாப்புதூர் போலீசார் நடத்திய விசாரணையில் தயானந்தன் சிறு வயது முதலே அதிகமாக யாரிடமும் பேசாமல் தனிமையாக இருந்து வந்துள்ளார். இதனால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் தயானந்தன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்