வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல்
வேலூர்-ஆற்காடு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளானார்கள்.;
வேலூர் மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகளில் ஆற்காடு சாலையும் ஒன்றாகும். இங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தினமும் வந்து செல்கின்றனர். அதன்காரணமாக இந்த சாலை வாகனங்கள், பொதுமக்கள் நடமாட்டத்தால் எப்போதும் பரபரப்பாக காணப்படும். மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வரும் நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் அடிக்கடி சாலையை கடப்பதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை தவிர்க்க மருத்துவமனையின் அருகே காந்திரோடு செல்லும் பகுதியில் போக்குவரத்து போலீசார் பணியில் ஈடுபட்டிருப்பார்கள்.
இந்த நிலையில் குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா பாதுகாப்பு பணிக்காக போக்குவரத்து போலீசார் உள்பட 1,500-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு சென்றனர். அதனால் வேலூர்-ஆற்காடு சாலையில் மருத்துவமனையின் அருகே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக சில ஆட்டோக்கள் காந்திரோடு செல்லும் பகுதியிலும், மருத்துவமனை பஸ்கள் வரிசையாக சாலையோரமும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதனால் வாகனங்கள் உடனடியாக அங்கிருந்து செல்வதில் சிரமம் ஏற்பட்டது. அதன்காரணமாக சிறிதுநேரம் வாகனங்கள் வரிசையாக அணிவகுந்து நின்றன. போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகினர். சிறிதுநேரத்துக்கு பின்னர் அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் சீரானது.
இதேபோன்று சத்துவாச்சாரி கெங்கையம்மன் கோவில் முதல் கலெக்டர் அலுவலக மேம்பாலம் வரையிலான பெங்களூரு-சென்னை அணுகுசாலையிலும் பிற்பகல் 3 மணியளவில் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.