அரசு ஜீப்- பஸ் மோதல்; போக்குவரத்து நெரிசல்
அரசு ஜீப்- பஸ் மோதியதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.;
தஞ்சை- திருச்சி சாலையில் மேரீஸ்கார்னர் கான்வென்ட் பள்ளி அருகில் நேற்று மாலை அரசு பஸ்சும், அரசு ஜீப்பும் மோதிக்கொண்டன. இதனால் 2 வாகனமும் நடு ரோட்டில் நின்றதால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதில் ஒருபுறம் ராமநாதன் ரவுண்டானா வரையும், மற்றொரு புறம் நாகை சாலையில் சாந்தப்பிள்ளை கேட் மேம்பாலம் இறங்கும் இடம் வரையும், மேம்பாலத்தின் அடிப்பகுதியிலும் வாகனங்கள் அப்படியே அணிவகுத்து நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். நடந்து செல்பவர்களும் மிகவும் சிரமம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்துக்குள்ளான அரசு வாகனங்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் போக்குவரத்து சீரானது. இதனால் அந்த பகுதியில் 30 நிமிடத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.