முடிகொண்டானாற்றில் குறுகலான பாலத்தால் போக்குவரத்து நெருக்கடி
திருமருகல் அருகே திருப்புகலூர் முடிகொண்டானாற்றில் குறுகலான பாலத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.;
திருமருகல் அருகே திருப்புகலூர் முடிகொண்டானாற்றில் குறுகலான பாலத்தால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருவதால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
குறுகலான பாலம்
நாகை மாவட்டம் திருமருகல் அருகே திருப்புகலூர் மெயின் சாலையில் முடிகொண்டானாற்றின் குறுக்கே மிகவும் குறுகலான கான்கிரீட் பாலம் உள்ளது. திருப்புகலூர்-திருக்கண்ணபுரம் இடையே உள்ள இந்த பாலத்தின் வழியாக நாகை, திருவாரூருக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
திருப்புகலூர் அக்னீஸ்வரர் கோவில், திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள்கோவில், திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களுக்கு செல்லும் பக்தர்கள், திருப்புகலூர்-திருக்கண்ணபுரம் கிராமங்களை சேர்ந்த பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், அரசு ஊழியர்கள், தொழிலாளர்கள் என பல்வேறு தரப்பினர் இந்த பாலம் வழியாக சென்று வருகின்றனர்.
போக்குவரத்து நெருக்கடி
இந்தநிலையில் குறுகலான பாலத்தில் பஸ்கள் சென்றுவர முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக கிராம மக்கள் தினசரி அவதிப்பட்டு வருகிறார்கள். பாலத்தின் இரு புறங்களில் பஸ்கள் உரசியபடி செல்வதால் பயணிகள் அச்சத்தில் உள்ளனர். நாகை-நன்னிலம் சாலையில் இருந்து பிரிந்து இந்த குறுகலான பாலத்திற்குள் செல்வதற்குள் பஸ் டிரைவர்கள் படாதபாடு படுகிறார்கள். நாகை-நன்னிலம் சாலையில் போக்குவரத்து துரிதமாக நடைபெற இந்த பாலம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே அடிக்கடி போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதை தடுக்கும் வகையிலும், விபத்து அபாயத்தை போக்கும் வகையிலும் பழுதான இந்த குறுகிய பாலத்தை அகற்றிவிட்டு பஸ் போக்குவரத்து எளிதாக நடைபெறும் வகையில் புதிதாக அகலமான பாலம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.