தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து துண்டிப்பு
வாணியம்பாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
வாணியம்பாடி பகுதியில் பெய்த பலத்த மழை காரணமாக தரைப்பாலம் மூழ்கி போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மருத்துவமனை வளாகத்தை வெள்ளம் சூழ்ந்ததால் நோயாளிகள் அவதியடைந்தனர்.
மருத்துவமனையை வெள்ளம் சூழ்ந்தது
வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நகரின் பல்வேறு தெருக்களில் மழை நீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடுகிறது. வாணியம்பாடி அரசு மருத்துவமனை வளாகம் மற்றும் வெளிப்புறத்தில் உள்ள சாலைகளில் மழைநீர் குளம் போல் சூழ்ந்துள்ளது.
இதனால் வெளி நோயாளிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். நகராட்சி அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் அரசு மருத்துவமனை மற்றும் அதன் முன்பாக சாலையில் தேங்கியுள்ள நீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். கழிவுநீர் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாததே இது போன்ற நிலைக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
போக்குவரத்து துண்டிப்பு
இதே போல் தமிழக- ஆந்திர எல்லையில் உள்ள வனப்பகுதிகளிலும், பாலாறு நீர் பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் வாணியம்பாடி நகரின் மையப்பகுதியில் முக்கிய சாலையின் குறுக்கே செல்லக்கூடிய கிளையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஓம்சக்தி கோவில் அருகே உள்ள கிளையாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தரைப்பாலம் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, இரு புறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, தரைப்பாலத்தை கடந்து செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
இதேபோல் வாணியம்பாடி நகரில் இருந்து சுமார் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் ஒரே வழிபாதையாக இருந்த பெரியபேட்டை சந்திப்பில் உள்ள தரைப்பாலமும் நீரில் மூழ்கியதால் சாலையில் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
நெரிசல்
மிகவும் அபாயமான சூழல் நிலவி வருவதால் போலீசார் இரு புறமும் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லும் கிராம மக்கள் தற்போது மாற்று பாதையாக சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பொன்னியம்மன் கோவில் பின்புறம் உள்ள சிறு பாலத்தை மட்டுமே கடந்து செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனைத்து வாகனங்களும் ஒரே சாலையில் செல்வதால் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.