வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடி
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.;
சீர்காழி:
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடியை தவிர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வைத்தீஸ்வரன் கோவில்
சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாத சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், விநாயகர், செல்வமுத்து குமாரசாமி, செவ்வாய் (அங்காரகன்), தன்வந்திரி ஆகிய தெய்வங்கள் தனி சன்னதிகளோடு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றன. புகழ்பெற்ற இக்கோவிலுக்கு உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து ஏராளமானோர் நேரில் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் இக்கோவில் பரிகார தலமாக இருப்பதால் முகூர்த்த நாட்களில் இந்த கோவில் மற்றும் கோவிலை சுற்றியுள்ள திருமண மண்டபங்களில் திருமணம், காதுகுத்து, வளையல் அணிவித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அப்போது இந்த நிகழ்ச்சிகளுக்கு வரும் வாகன ஓட்டிகள் தங்களுடைய வாகனங்களை சாலையிலேயே நிறுத்தி விட்டு செல்வதால் அடிக்கடி வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு கடுமையாக ஏற்பட்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் அவசர காலங்களில் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வாகனங்களும் செல்ல முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் நீண்ட காலமாக தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஒருவழி பாதை அமைக்க வேண்டும்
இது குறித்து பூம்புகார் எம். சங்கர் கூறுகையில், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் உள்ள புகழ் பெற்ற வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு உலகம் முழுவதும் இருந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனால் தினமும் ஏராளமான வாகனங்கள் வைத்தீஸ்வரன் கோவில் பகுதிக்கு வந்து செல்கின்றன. இந்த வாகனங்களை நிறுத்த இடம் இல்லாததால் கோவிலின் நான்கு முக்கிய வீதிகளிலும் அவை நிறுத்தப்படுகின்றன. இதனால் இந்த பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. மேலும் தற்போது மழை நீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த பணி தாமதமாக நடைபெறுவதால் போக்குவரத்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.எனவே இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும். வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து பாதிப்பை தவிர்க்கும் வகையில் கீழவீதி, இரட்டை பிள்ளையார் கோவிலில் இருந்து பஸ் நிலையம் வரை மாற்று ஒருவழி பாதை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அப்போதுதான் நிரந்தரமாக வைத்தீஸ்வரன் கோவில் பகுதியில் போக்குவரத்து தடை ஏற்படாத நிலை ஏற்படும் என்றார்.