சாலையில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து நெரிசல்
மணப்பாறையில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் தா.பேட்டையிலும் பலத்த மழை பெய்தது.
மணப்பாறையில் பலத்த மழை பெய்ததால் சாலையில் தேங்கிய தண்ணீரால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதேபோல் தா.பேட்டையிலும் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
மணப்பாறை, கோவில்பட்டி, துவரங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கடுமையாக இருந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
இந்நிலையில் நேற்று மாலை குளிர்ந்த காற்று வீசியது. திடீரென மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை சுமார் 1½ மணி நேரம் பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மணப்பாறை பஸ் நிலையம் முன்பு மற்றும் ரவுண்டானா பகுதியில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதேநேரத்தில் மழைநீருடன், கழிவு நீரும் கலந்து சாலையில் ஓடியதால் கடும் துர்நாற்றமும் வீசியது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் நடந்து சென்ற மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். மணப்பாறை மட்டுமின்றி கோவில்பட்டி, துவரங்குறிச்சி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
தா.பேட்டை
தா.பேட்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை வானில் கருமேகங்கள் சூழ்ந்த நிலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தற்போது விவசாயிகள் நாற்று நட்டு விவசாய பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் மழை பெய்ததால் விவசாயிகள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.