சாலைகளை விரிவு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்
சாலைகளை விரிவு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்று திருவண்ணாமலையில் நடந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.;
சாலைகளை விரிவு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும் என்று திருவண்ணாமலையில் நடந்த வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
ஆய்வுக்கூட்டம்
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் மாவட்ட வருவாய்த்துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது. பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருவாய்த்துறையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார். பொதுவாக வருவாய்த்துறை என்று எடுத்துக்கொண்டால் பட்டா மாற்றம் சாதிச்சான்று வழங்குவது பெரும் பங்கு வகிக்கிறது.
புதிய பட்டா பெற வேண்டுபவர்கள் அரசு விதிகளுக்குட்பட்டு சரியான முறையில் இருந்தால் தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்து பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இடவசதி
திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவுக்கு 42 லட்சம் பக்தர்கள் வந்தனர். அப்போது பஸ்கள் நிறுத்த போதுமான இடவசதி இல்லாமல் இருந்தது. புதிய பஸ் நிலையம் வரப்பெற வருவாய்த்துறை பெரும் உதவியாக இருந்தது.
தேர்வு செய்யப்பட்ட இடத்தில் உள்ள 19 வீடுகளில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் தேர்வு செய்து பட்டா வழங்க வருவாய்துறை அரசு விதிகளுக்குட்பட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
தற்போது உள்ள சூழ்நிலையில் நகர்ப்புற சாலைகளை விரிவுப்படுத்துவது இன்றியமையாதது. சாலைகளை விரிவு செய்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும்.
அதன் அடிப்படையில் தான் திருவண்ணாமலை முதல் செங்கம், வேலூர் முதல் சித்தூர் சாலை மற்றும் கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சாலை விரிவுபடுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பட்டா வழங்க நடவடிக்கை
இதையடுத்து வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:-
வருவாய்துறை என்பது ஆங்கிலேயர் காலத்தில் உண்டாக்கப்பட்டது. வருவாய் துறையிலிருந்து தான் எல்லாத்துறையும் பிரிந்தது, வருவாய்துறை தான் எல்லா துறைக்கும் தாய் துறையாக இருந்தது. பட்டா மாறுதல் சம்பந்தமான வரும் பிரச்சினைகளை ஆய்வு செய்து உடனடியாக சரி செய்ய வேண்டும்.
சாதிச் சான்று கேட்டு பள்ளி மாணவ, மாணவிகள் இ-சேவையின் மூலம் விண்ணப்பிக்கும் போது கால தாமதமின்ற உடனடியாக வழங்க வேண்டும்.
சாதிச்சான்று கேட்டு மாணவர்கள் விண்ணப்பிக்கும் போது 15 நாட்களுக்குள் வழங்க வேண்டும் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளாா். எனவே சாதிச்சான்றிதழினை காலதாமதமின்றி வழங்க வேண்டும்.
இ-சேவை மையங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கு பயிற்சி வழங்க வேண்டும். தகுதியான நபர்களுக்கு பட்டா வழங்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கூடுதல் தலைமை செயலாளர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர் எஸ்.கே.பிரபாகர், பேரிடர் மேலாண்மை துறை முதன்மை செயலாளர் குமார்ஜெயந்த், நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனர் டாக்டர் வினய், வருவாய் நிர்வாக ஆணையர் ஜான்லூயிஸ், கலெக்டர்கள் முருகேஷ் (திருவண்ணாமலை), ஷரவன்குமார் (கள்ளக்குறிச்சி),
சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி (செங்கம்), அம்பேத்குமார் (வந்தவாசி), பெ.சு.தி.சரவணன் (கலசபாக்கம்), ஜோதி (செய்யாறு), தேவராஜி (ஜோலார்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்), உதயசூரியன் (சங்கராபுரம்), கண்ணன் (உளுந்தூர்பேட்டை), வசந்தம் கார்த்திகேயன் (ரிஷிவந்தியம்), திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதிசீனுவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.