மெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம்

மெட்ரோ ரெயில் பணி காரணமாக மெரினா சர்வீஸ் சாலையில் ஒரு ஆண்டுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.;

Update:2023-07-05 05:09 IST

போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரெயில் திட்ட பணிகள் கலங்கரை விளக்கம் பகுதியில் நடைபெற்று வருகின்றன. இதில், காந்தி சிலைக்கு பின்புறம் உள்ள மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையின் 7.02 மீட்டர் அகலம் மற்றும் 480 மீட்டர் நீளம் முழுவதும் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், பயன்படுத்த இயலாது. இதன் காரணமாக மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் 6-ந்தேதி (நாளை) முதல் ஒரு வருடத்துக்கு பின்வரும் போக்குவரத்து மாற்றங்களை செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.

போர் நினைவுச்சின்னம்

அதன் விவரம் வருமாறு:-

* லூப் ரோடு மற்றும் காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவு சின்னம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

* போர் நினைவு சின்னத்திலிருந்து வரும் வாகனங்கள் மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

காந்தி சிலை

* கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்டபகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் 'யூ-டர்ன்' செய்து கலங்கரை விளக்கம் வந்தடைந்து, வலதுபுறம் திரும்பி காமராஜர் சாலை வழியாக சென்று அவர்கள் இலக்கை அடையலாம்.

* போர் நினைவுச்சின்னத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்லவிரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் உள்ள தடை செய்யப்பட்ட பகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக, அவர்கள் 'யூ-டர்ன்' செய்து இடது புறம் திரும்பி லாயிட்ஸ் சாலை வழியாக காமராஜர் சாலையை அடைந்து அவர்கள் இலக்கை அடையலாம்.

வாகன ஓட்டுனர்கள் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட தகவல் சென்னை போக்குவரத்து போலீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்