போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி மையம்
தெப்பக்குளம் பகுதியில் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி மையத்தை போலீஸ் கமிஷனர் திறந்து வைத்தார்.
மதுரை தெப்பக்குளம் பகுதியில் மாநகர போக்குவரத்து காவல்துறை சார்பில், போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகர போலீஸ் கமிஷனர் லோகநாதன் நேற்று திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், "மதுரை மாநகரை பொறுத்தவரையில் வாகன விபத்துகள் அதிக அளவில் நடந்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு காவல்துறை சார்பில் பல்வேறு முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களுக்கு வாகன விபத்து குறித்தும், அதனால் ஏற்படும் உயிரிழப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் தெப்பக்குளம் பகுதியில் கண்காட்சி மையம் திறக்கப்பட்டுள்ளது. இதில், சாலை விதிகள் குறித்தும், அவற்றை மீறினால் விதிக்கப்படும் அபராதம், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களால் ஏற்படும் விபத்துக்களை தடுப்பது குறித்து, விளம்பர பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த கண்காட்சி 10 நாட்கள் செயல்படும். வரும் காலங்களில் பொதுமக்கள் கூடும் இடங்களில் இதுபோல் கண்காட்சி அமைக்கப்படும்.
மதுரையில் இதுவரை நடந்த விபத்துகளை பார்க்கும்போது, இரு சக்கர வாகனங்களில் செல்பவர்களால் அதிக அளவில் விபத்து ஏற்படுகிறது. அதனை குறைக்கும் நோக்கத்தோடு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில் வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறோம். அவ்வாறு அணிந்தால், உயிரிழப்புகளை கட்டுப்படுத்த முடியும்" என்றார்.