சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பியதால் போக்குவரத்து பாதிப்பு
சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் திரும்பியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு சென்றிருந்தவர்கள் விடுமுறை முடிந்ததால் நேற்று புறப்பட தொடங்கினர். சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்பி வர தமிழக அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஆனாலும் பஸ்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதே போல் வெளியூர்களில் தங்கியிருந்து வேலை பார்த்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களும், பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு வந்தவர்களும் நேற்று புறப்பட்டனர். இதனால் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக காணப்பட்டது. மேலும் பொங்கல் பண்டிகையை கொண்டாட தென் மாவட்டங்களுக்கு சென்றவர்கள் நேற்று கார், ஆம்னி பஸ்கள் உள்ளிட்டவற்றில் சென்னைக்கு ஒரே நேரத்தில் திரும்பி சென்றவாறு இருந்தனர். இதனால் சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் பகுதியில் போக்குவரத்து நிறைந்து பரபரப்பாக காணப்பட்டது. இதில் சிறுவாச்சூரில் மேம்பால பணி நடப்பதாலும், திருமாந்துறை சுங்கச்சாவடியிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றதை காணமுடிந்தது.