ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

ஊட்டி-மஞ்சூர் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.;

Update: 2022-07-23 13:47 GMT

ஊட்டி, 

ஊட்டி-மஞ்சூர் சாலையில் ராட்சத மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ராட்சத மரம் விழுந்தது

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து பெய்து வருகிறது. நடப்பாண்டில் இதுவரை வழக்கதத்தை விட 91 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்து உள்ளது. இந்தநிலையில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நீடிப்பதால் நாளை (திங்கட்கிழமை) வரை நீலகிரி உள்பட 23 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

அதன்படி நேற்று முன்தினம் பர்லியார், குன்னூர், எல்லநள்ளி உள்ளிட்ட பகுதிகளில் 3 மணி நேரம் பலத்த மழை பெய்தது. நடுவட்டம், மசினகுடி, கேத்தி உள்ளிட்ட பகுதிகளிலும் மழை கொட்டியது. தொடர் மழை காரணமாக சாலையோர மண் ஈரப்பதமாக உள்ளது. இந்தநிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஊட்டி-மஞ்சூர் சாலை லவ்டேல் பகுதியில் பழமையான ராட்சத மரம் முறிந்து விழுந்தது.

போக்குவரத்து பாதிப்பு

இந்த மரம் மின்மாற்றி, கடை டிரான்ஸ்பார்மர் மீதும் விழுந்தது. இதனால் காந்திபேட்டை உள்பட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் அரசு பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தகவல் அறிந்த ஊட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் மரத்தை வெட்டி அகற்றினர்.

அந்த சாலையில் மேலும் 2 இடங்களில் மரம் விழுந்தது. 2 மரங்களும் எந்திரம் மூலம் வெட்டி அப்புறப்படுத்தப்பட்டது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீலகிரி மின்பகிர்மான மேற்பார்வை பொறியாளர் பிரேம்குமார் உத்தரவின் படி துணை பொறியாளர் ஆறுமுகம் தலைமையில் ஊழியர்கள் சேதமடைந்த மின்மாற்றியை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக நீர்நிலைகள் மற்றும் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஆங்காங்கே மழை பெய்வதால் சாலைகளில் கடும் பனிமூட்டம் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்