போக்குவரத்து விதிகளை மீறியதாக 24 ஆயிரத்து 640 வழக்கு பதிவு

காங்கயத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 24 ஆயிரத்து 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.47 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-01-22 16:53 GMT

காங்கயத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 24 ஆயிரத்து 640 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.47 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

24 ஆயிரத்து 640 வழக்குகள்

திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். விதி மீறும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர்.

இந்த நிலையில் காங்கயத்தில் கடந்த 2022-ம் ஆண்டில் காங்கயம் போக்குவரத்து போலீசார் நகரின் முக்கிய பகுதிகளில் நடத்திய வாகன சோதனையில் குடிபோதையிலும், வாகனத்தில் செல்லும் போது தலைக்கவசம் அணியாமலும், லைசென்ஸ் இல்லாமலும், சீருடை அணியாமல், செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது உட்பட பல்வேறு விதிகளை மீறியதாக 24 ஆயிரத்து 640 வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.47 லட்சத்து 30 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

மேலும் வாகனத்தில் செல்லும்போது தலைக்கவசம் அணிவது, சீட் பெல்ட் அணிவது, குடிபோதையில் வாகனம் ஓட்டக்கூடாது, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது என்பது உட்பட பல்வேறு போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கியும், இருசக்கர வாகன ஊர்வலங்கள் நடத்தியும் பொதுமக்களுக்கு போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

மேலும் காங்கயம் பகுதியில் விபத்துக்களை தடுக்கும் விதமாக அதிக அளவில் விபத்துகள் ஏற்படும் அபாயகரமான வளைவுகள் மற்றும் விபத்து பகுதிகளில் தடுப்புகள் அமைத்தும், ஒளிரும் சோலார் சிக்னல் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த விளக்குகள் இரவு, பகல் நேரங்களில் விட்டு விட்டு ஒளிர்வதால் வாகன ஓட்டுனர்கள் எச்சரிக்கையுடன் இரவு மற்றும் பகல் நேரங்களில் தங்கள் வாகனங்களின் வேகத்தை குறைத்து இயக்கி வருகின்றனர்.

ஒளிரும் பதாகைகள்

இதனால் விபத்துக்கள் ஏற்படுவது பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. மேலும் இதுபோன்ற ஒளிரும் சோலார் சிக்னல் விளக்குகள் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.

இதேபோல் தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலை சாலைகளின் ஓரங்களில் நெடுஞ்சாலை துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பெரிய அளவிலான ஒளிரும் பதாகைகள் அமைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்