வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம்
நெல்லை மாவட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நடந்தது.
நெல்லை மாவட்ட வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கூட்டம் நேற்று மாலை புதிய பஸ் நிலையம் அருகே நடந்தது. மாவட்ட தலைவர் ராஜசேகர் தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் எஸ்.கே.எம்.சிவக்குமார், மாநில செயலாளர் முத்துக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு நியமன ஆணை வழங்கப்பட்டது.
பின்னர் வியாபாரிகள் சங்க பேரவை தலைவர் முத்துக்குமார் நிருபர்களிடம் கூறுகையில், 'தமிழக அரசு மத்திய அரசுடன் இணைந்து ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில் அதிகாரிகள் எந்த நேரத்திலும் எந்த கடைக்கும் சென்று சோதனை நடத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வியாபாரிகள் பீதியில் உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு வரி உயர்ந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும் அரசு இதுபோன்று செயல்படுவதன் நோக்கம் புரியவில்லை. மேலும் வியாபாரிகளுக்கு அதிகாரிகள் அதிகப்படியான அபராதம் விதித்து வருகிறார்கள். இதனால் சுதேசி வியாபாரம் நசுங்கிவிட்டது. இதனை கண்டித்து தமிழக முழுவதும் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற 10-ந் தேதி சென்னையில் கண்டன போராட்டம் நடத்தப்படுகிறது. தொடர்ந்து 11- ந்தேதி மதுரையிலும் நடத்தப்படுகிறது. இதேபோல் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் போராட்டங்கள் நடத்தப்படும். எனவே தமிழக அரசு இதுபோன்ற செயல் முறையை உடனே மாற்ற வேண்டும்' என்றார். இந்த கூட்டத்தில் நிர்வாகிகள் தருவை காமராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.