ஷட்டரில் மின்கசிவால் மின்சாரம் தாக்கி வியாபாரி பலி

கடையின் ஷட்டரில் ஏற்பட்ட மின்கசிவால் மின்சாரம் தாக்கி வியாபாரி பலியானார்.;

Update: 2023-04-09 05:51 GMT

சென்னை புளியந்தோப்பு வ.உ.சி நகர், 6-வது தெருவை சேர்ந்தவர் கோபி (வயது 29). பட்டப்படிப்பு முடித்த இவர், தனது வீட்டின் முன்பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இவர், தன்னுடைய தாயார் மேகனா, மனைவி ராஜலட்சுமி, தம்பி விஜய், அவருடைய மனைவி பிரவிதா ஆகியோருடன் ஒரே வீட்டில் கூட்டுக்குடும்பமாக வசித்து வந்தார்.

நேற்று காலை வழக்கம் போல் கோபி மளிகை கடையை திறக்க சென்றார். கடையின் ஷட்டரை திறந்தபோது, கோபி மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அவரது குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதில் வந்த மருத்துவ உதவியாளர்கள் கோபியை பரிசோதித்ததில் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்துவந்த புளியந்தோப்பு போலீசார், பலியான கோபி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் கோபி வீட்டின் அருகே உள்ள மின்சார பெட்டியில் இருந்து சிலர் திருட்டுத்தனமாக மின் இணைப்பை எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

அந்த திருட்டு மின்சார வயர் கோபியின் கடை வழியாக செல்கிறது. இதனால் கோபியின் மளிகை கடை இரும்பு ஷட்டரில் அந்த மின்சார வயர் உரசியதால் மின்கசிவு ஏற்பட்டு, ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இது தெரியாமல் ஷட்டரில் கை வைத்த கோபி மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பலியான கோபிக்கு திருமணமாகி 6 வருடங்களாகியும் குழந்தை இல்லை. தற்போதுதான் அவருடைய மனைவி ராஜலட்சுமி, 2 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்