தஞ்சையில் இருந்து புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 3¼ மணி நேரம் தாமதம்
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தஞ்சையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 3¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும் தஞ்சை-திருச்சி-மயிலாடுதுறை இடையேயான ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.;
தஞ்சாவூர்;
தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தஞ்சையில் இருந்து நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் 3¼ மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றது. மேலும் தஞ்சை-திருச்சி-மயிலாடுதுறை இடையேயான ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.
தண்டவாள பராமரிப்பு பணி
திருச்சி ரெயில்வே கோட்டத்திற்குட்பட்ட வழித்தடங்களில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் நேற்று ஒரு நாள் மட்டும் தஞ்சை- திருச்சி இடையேயும், தஞ்சை-மயிலாடுதுறை இடையேயும், திருச்சி-காரைக்கால் இடையேயும், மயிலாடுதுறை-திருச்சி இடையேயான ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.இதேபோல் சில ரெயில்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சில ரெயில்கள் பகுதியாகவும் ரத்து செய்யப்பட்டன.
உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில்
தஞ்சையில் இருந்து சென்னைக்கு உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் தினமும் இரவு 9.55 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்டு பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை எழும்பூருக்கு அதிகாலை 4.25 மணிக்கு சென்றடையும்.இதேபோல் சென்னையில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்படும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் மறுநாள் காலை 6 மணிக்கு தஞ்சை வந்தடையும்.
3¼ மணி நேரம் தாமதம்
தஞ்சை வந்த பின்னர் இந்த ரெயில் சுத்தம் செய்வதற்காக திருச்சிக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் அங்கிருந்து இரவு புறப்பட்டு தஞ்சைக்கு வந்து பின்னர் சென்னை செல்லும்.அதன்படி நேற்று முன்தினம் இரவு தஞ்சைக்கு வர வேண்டிய ரெயில் தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக தாமதமாக நள்ளிரவு வந்தது. இதனால் தஞ்சையில் இருந்து சென்னைக்கு செல்லும் உழவன் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் இரவு 9.55 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக நள்ளிரவு 1.17 மணிக்கு 3 மணி நேரம் 22 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்றது.
16 ரெயில்கள் ரத்து
இதன் காரணமாக நேற்று தஞ்சையில் இருந்தும், தஞ்சை வழியாகவும் செல்லும் 16 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. தஞ்சையில் இருந்து திருச்சி, மயிலாடுதுறை, திருச்சியில் இருந்து காரைக்கால் செல்லும் ரெயில்களும், காரைக்காலில் இருந்து திருச்சி செல்லும் ரெயில்களும், தஞ்சையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரெயில்களும் ரத்து செய்யப்பட்டன.மன்னார்குடியில் இருந்து திருச்சி வரை இயக்கப்படும் டெமு விரைவு ரெயில் திருவெறும்பூரில் இருந்து திருச்சி வரை ரத்து செய்யப்பட்டது.ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் தஞ்சை ரெயில் நிலையத்துக்கு வந்த பயணிகள் தகவல் அறிந்ததும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.