பூமரிச்சான் தீவை படகில் சென்று பார்த்து ரசித்த சுற்றுலா பயணிகள்

தொடர் விடுமுறையையொட்டி மண்டபம் அருகே நடுக்கடலில் உள்ள பூமரிச்சான் தீவை படகில் சென்று சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

Update: 2023-10-24 18:45 GMT

தொடர் விடுமுறை

ராமநாதபுரம் மாவட்டம் மற்றும் தூத்துக்குடிக்கு இடைப்பட்ட மன்னார் வளைகுடா கடல் பகுதியில் 21 தீவுகள் உள்ளன. இந்த 21 தீவுகளை சுற்றிய கடல் பகுதியில் ஆமை, டால்பின், கடல் பசு உள்ளிட்ட 3600 வகையான அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதுபோல் மண்டபம் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பூமரிச்சான் தீவுக்கும் வனத்துறை சார்பில் சுற்றுலா படகு போக்குவரத்தும் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறையையொட்டி ராமேசுவரம் பகுதிக்கு சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகமாகவே இருந்தது. மண்டபம் காந்திநகர் பகுதியில் இருந்து பூமரிச்சான் தீவுக்கு இயக்கப்பட்டு வரும் சுற்றுலா படகு போக்குவரத்துக்கும் சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர்.

ரசித்த சுற்றுலா பயணிகள்

காந்திநகர் கடற்கரையில் வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுலா படகு போக்குவரத்து படகு நிறுத்தும் தளத்தில் இருந்து பைபர் படகில் அழைத்து செல்லப்படும் சுற்றுலா பயணிகள் நடுக்கடலுக்குள் உள்ள பூமரிச்சான் தீவின் அழகையும், தீவை சுற்றியுள்ள கரையோரத்தில் கடல் பகுதியில் உள்ள அரியவகை பவளப்பாறை உள்ளிட்ட பல உயிரினங்களையும் பார்த்து ரசித்தனர்.

மண்டபத்தில் இருந்து பூமரிச்சான் தீவு வரையிலும் வனத்துறை பைபர் படகில் சுற்றுலா பயணி ஒருவர் சென்று வருவதற்கு ரூ.300 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்