ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகள்

ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

Update: 2022-05-28 16:10 GMT

பொள்ளாச்சி, மே.29-

ஆழியாறு அணைக்குள் அத்துமீறி சென்ற சுற்றுலா பயணிகளை போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

போலீசார் எச்சரிக்கை

பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு அணைக்கு கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்ட மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அணையில் ஆழம் தெரியாமல் இறங்கி குளிப்பது, செல்பி எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் அணையில் மூழ்கிய ஒருவரை காப்பாற்ற சென்ற கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

தற்போது கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளதால் வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் படகு இல்லம் கட்டப்பட்டு உள்ள பகுதி வழியாக அணைக்குள் செல்கின்றனர். இந்த நிலையில் அந்த வழியாக ரோந்து வந்த ஆழியாறு போலீசார் அணைக்குள் நின்ற சுற்றுலா பயணிகளை எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் அணையில் குளிப்பதால் ஏற்படும் ஆபத்துகள், உயிரிழப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

அறிவிப்பு பலகை

ஆழியாறு அணை ஆழமானது மட்டுமல்ல ஆபத்தானது. அணையில் பாறைகள், சுழல்கள் இருப்பதால் நீச்சல் தெரிந்தவர்கள் குளித்தாலும் சுழலில் சிக்கி உயிரிழக்க நேரிடுகிறது. இதை பொதுப்பணித்துறையினரும் கண்டுகொள்வதில்லை. கூட்டம், கூட்டமாக படகு இல்லம் வழியாக அணைக்குள் சென்று குளிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3 பேர் உயிரிழந்து உள்ளனர்.

எனவே வெளியூர்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு அணையில் உள்ள ஆபத்து குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் அறிவிப்பு பலகையை ஆங்காங்கே வைக்க வேண்டும். மேலும் விடுமுறை நாட்களில் போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் இணைந்து அணை, தடுப்பணை பகுதிகளில் ரோந்து செல்ல வேண்டும். படகு இல்லம் வழியாக அணைக்குள் செல்வதை தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்