டிசம்பர் இறுதிக்குள் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள்: அதிகாரிகள் விளக்கம்

டிசம்பர் இறுதிக்குள் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.;

Update: 2022-11-19 09:04 GMT

கன்னியாகுமரி,

கன்னியாகுமரியில் தொடர் மழை காரணமாக திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி நிறுத்தப்பட்டுள்ளது. திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி கன்னியாகுமரி கடல் நடுவில் அமைந்துள்ள பாறையில் விவேகானந்தர் நினைவு மண்டபமும், மற்றொரு பாறையில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.

உப்பு காற்றினால் சிலை பாதிக்கப்படும். இதனால் திருவள்ளுவர் சிலையின் தன்மை பாதிப்படையாமல் இருப்பதற்காக 4 வருடங்களுக்கு ஒருமுறை சிலிக்கான் என்ற ரசாயன கலவை பூசுவது வழக்கம். இதற்காக சிலையில் உள்ள உப்புத்தன்மை நீக்கப்பட்டு பின்னர் ரசாயன கலவை பூசப்படும்.

இந்தநிலையில் கடந்த ஜூன் மாதம் 6-ந் தேதி திருவள்ளுவர் சிலை பராமரிப்பு பணி தொடங்கியது. சிலையை சுற்றிலும் இரும்பு சாரம் அமைக்கப்பட்டு பராமரிப்பு பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். மழையால் பாதியில் நிறுத்தம் இந்த சிலையில் உள்ள உப்புத்தன்மையை அகற்றுவதற்காக சிலை முழுவதும் காகிதகூழ் ஒட்டும் பணி நடைபெற்றது.

சிலையின் மீது ஒட்டப்பட்ட காகித கூழை ரசாயன பரிசோதனைக்கு உட்படுத்தி உப்பு படிந்திருக்கும் அளவு கண்டறியப்படும். அதனை தொடர்ந்து ரசாயன கலவை சிலையின் மீது பூசப்படும். தற்போது தொடர் மழையின் காரணமாக சிலையின் மீது ஒட்டப்பட்டு இருந்த காகிதக்கூழ் மழை தண்ணீரில் கரைந்து சேதமடைந்து விட்டன.

இதன் காரணமாக பணி நிறுத்தப்பட்டது. மழை குறைந்த பிறகு மீண்டும் காகிதக்கூழ் ஒட்டப்பட்டு அதன் பிறகு பராமரிப்பு பணிகள் தொடங்கும். எனவே டிசம்பர் இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுற்றுலா வளர்ச்சி கழக அதிகாரிகள் விளக்கமளித்து உள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்