சுருளி அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்:நீண்ட வரிசையில் காத்திருந்து உற்சாக குளியல்
சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;
கம்பம் அருகே சுருளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து ஏற்படும். இங்கு தினமும் தேனி மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதியில் சாரல் மழை பெய்ததால் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இந்நிலையில் நேற்று சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். மேலும் ஆடி மாத சனிக்கிழமையையொட்டி அருகே உள்ள குச்சனூர் சுயம்பு சனீஸ்வரன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்களும் குடும்பத்தினருடன் சுருளி அருவிக்கு வருகை தந்தனர். இதனால் அருவியில் கூட்டம் அலைமோதியது. அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அருவியில் உற்சாகமாய் குளித்து மகிழ்ந்தனர்.