ஊசிமலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

விடுமுறை தினத்தை யொட்டி ஊசிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

Update: 2022-09-10 15:38 GMT

கூடலூர், 

விடுமுறை தினத்தை யொட்டி ஊசிமலைக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து உள்ளது.

ஊசிமலை காட்சிமுனை

நீலகிரி மாவட்டம் சிறந்த சுற்றுலா தலமாக திகழ்கிறது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் வாகன சவாரி செய்து, வனவிலங்குகளை கண்டு ரசிக்கின்றனர். பின்னர் கூடலூர் வழியாக ஊட்டிக்கு சென்று திரும்புகின்றனர். அப்போது ஊசிமலை காட்சி முனையையும் கண்டு ரசிக்கின்றனர். இதற்காக வனத்துறையின் கட்டுப்பாட்டில் சூழல் திட்டத்தின் கீழ் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் கேரளாவில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது. இதன் காரணமாக கூடலூர் பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மேலும் கடும் குளிர் நிலவுகிறது. ஊசிமலை காட்சிமுனையில் குளிரின் தாக்கம் அதிகமாக உள்ளது.

பள்ளத்தாக்குகளை ரசித்தனர்

இதனால் குளு, குளு காலநிலையை அனுபவிக்கவும், வார விடுமுறையை கழிக்கவும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர். மேலும் ஓணம் பண்டிகை உள்பட தொடர் விடுமுறை என்பதால் குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். அவர்கள் காட்சி முனையில் நின்று பசுமையான பள்ளத்தாக்குகள், அதை வருடி செல்லும் மேகக்கூட்டங்களை கண்டு ரசித்தனர். அங்கு தங்களது குடும்பத்தினருடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

இதேபோல் கூடலூர் நகரம், முதுமலை, கர்நாடகா பந்திப்பூர் வனப்பகுதியையும் பார்வையிட்டு செல்கின்றனர். இதுகுறித்து சுற்றுலா பயணிகள் கூறும்போது, பசுமையான பள்ளத்தாக்குகள், யூகலிப்டஸ் மரப்பண்ணை, அழகிய நீரூற்றுகள் கொண்ட பகுதிகளை கண்டு ரசித்தோம். மேலும் இங்கு குளு குளு சீசனை அனுபவிக்க முடிகிறது. கோடை காலத்தில் வந்தாலும் இதே அனுபவத்தை உணர முடியும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்