குரங்கு நீர்வீழ்ச்சியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆடிப்பெருக்கையொட்டி குரங்கு நீர்வீழ்ச்சியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.;
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆழியாறு அணை உள்ளது. அணை அருகில் பூங்கா, மீன் அருகாட்சியகம் அமைந்து உள்ளது. ஆடிப்பெருக்கையொட்டி கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள், புதுமண தம்பதிகள் உள்பட பலரும் குடும்பத்துடன் ஆழியாறுக்கு வந்தனர். அங்கு அணை, பூங்காவை சுற்றி பார்த்து மகிழ்ச்சியாக கொண்டாடினர். அணை பூங்காவிற்கு செல்ல சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நின்று நுழைவு சீட்டு வாங்கினர். அங்கு கடல் போல் காட்சியளித்த அணை, பசுமையான பூங்காவை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். அங்கு செல்பி எடுத்துக்கொண்டனர்.
சுற்றுலா பயணிகள் வந்த வாகனங்களை வால்பாறை ரோட்டில் ஆங்காங்கே சாலையோரம் நிறுத்தியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் நேற்று முன்தினம் வெள்ளப்பெருக்கு காரணமாக குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று நீர்வரத்து குறைந்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குளித்து மகிழ்ந்தனர்.
இதையொட்டி வனத்துறையினர் நீர்வீழ்ச்சி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.