கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

குளு, குளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதனால் 5 கிலோமீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.;

Update: 2023-04-08 16:11 GMT

குளு, குளு சீசன்

'மலைகளின் இளவரசியான' கொடைக்கானலில் குளு, குளு சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இதையொட்டி தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

நேற்று முன்தினம் தொடர் விடுமுறை விடப்பட்டதையொடடி ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்தனர். 2-வது நாளான நேற்றும் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதியது.

நடுவழியில் நின்ற வாகனங்கள்

தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

இதன் காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி வரை சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் இலகுரக வாகனங்களை அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அருகே திருப்பி ஆனந்தகிரி பகுதி வழியாக நகர் பகுதிக்கு அனுப்பினர். ஆனால் மேடான சாலை என்பதால் பல வாகனங்கள் நடுவழியில் நின்றன.

போலீஸ் பற்றாக்குறை

காலை முதல் மாலை வரை தொடர்ந்து வாகனங்கள் வந்து கொண்டே இருந்ததால் பல்வேறு தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதனால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போதிய போலீசார் இல்லாததால் நகரின் முக்கிய பிரமுகர்கள், சுற்றுலா வழிகாட்டிகள், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் என பல்வேறு தரப்பினரும் போக்குவரத்து நெரிசலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

படகு சவாரி

இதற்கிடையே ஒரு வழியாக கொடைக்கானல் வந்து சேர்ந்த சுற்றுலா பயணிகள், தங்களது வாகனங்களை சாலையோரம் ஆங்காங்கே நிறுத்தி விட்டு நடந்து சென்று பல்வேறு இடங்களை பார்வையிட்டனர்.

பில்லர் ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் நகரில் உள்ள தங்கும் விடுதிகள், ஹோம் ஸ்டே, தனியார் வீடுகள் அனைத்தும் நிரம்பி வழிந்தன. பலர் அறைகள் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர்.

கிடப்பில் போடப்பட்ட பணிகள்

இதற்கிைடயே கொடைக்கானல் ஏரிச்சாலையின் பல்வேறு பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில், அபிவிருத்தி பணிகள் கடந்த 3 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே வருகிற நாட்களில் ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி சாலை ஆகியவற்றை ஒரு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்றும், கனரக வாகனங்களை நகர் பகுதியில் நிறுத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

---------

Tags:    

மேலும் செய்திகள்