கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். வாகனங்கள் அணி வகுத்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Update: 2023-01-28 16:17 GMT

சுற்றுலா பயணிகள்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நிலவும் சீதோஷ்ண நிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக சனி, ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது.

அந்த வகையில், விடுமுறை தினமான நேற்று வழக்கத்தை விட சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. காலை முதலே கொடைக்கானலுக்கு ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இதன் எதிரொலியாக நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கொடைக்கானல் மூஞ்சிக்கல், கல்லறைமேடு, ஏரிச்சாலை, அப்சர்வேட்டரி உள்ளிட்ட இடங்களில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

போக்குவரத்து நெரிசல்

சுமார் 2 கிலோமீட்டர் தூரத்துக்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள், சாலையின் இருபுறத்திலும் அணி வகுத்தபடி ஊர்ந்து சென்றன. இதனால் சுற்றுலா பயணிகள் தாங்கள் செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இதேபோல் பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளுக்கு செல்ல முடியாமல் அவதியடைந்தனர். இதனையடுத்து போலீசார் அங்கு சென்று போக்குவரத்து நெரிசலை சீரமைத்தனர்.

கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் பிரையண்ட் பூங்கா, மோயர்பாயிண்ட், குணாகுகை, தூண்பாறை, பைன்மரக்காடு உள்ளிட்ட இடங்களை பார்த்து ரசித்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகுசவாரி செய்து மகிழ்ந்தனர்.

ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்து ஆனந்தம் அடைந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்